உடற்பயிற்சிகளில் அனைவராலும் எளிதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று நடைப்பயிற்சி. இதற்கு காரணம் எளிமை, செலவில்லாமை, பாதுகாப்பு ஆகியவை. ஜிம்மில் சேர வேண்டிய அவசியமில்லை; சிறப்பு பயிற்சியாளர்களும் தேவையில்லை. சாலைகளில், மைதானங்களில், வீட்டு மாடியில் கூட சுலபமாக நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். பக்கவிளைவுகள் இல்லாத இந்தப் பயிற்சி, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பொருந்தக்கூடியது.
இதன் மதிப்பை சமீபத்திய ஆய்வு ஒன்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. போலந்தில் உள்ள லாட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் 2,27,000 பேரின் வாழ்க்கை தரவுகளை ஆய்வு செய்து, நடைப்பயிற்சி மனிதனின் இதய ஆரோக்கியம், மனநிலை மற்றும் ஆயுள் நீடிப்பு ஆகியவற்றில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
அந்த ஆய்வு கூறுவது: தினமும் 2,337 அடிகள் நடந்தால் இதய நோய் அபாயம் குறையும்; 3,967 அடிகள் நடந்தால் இளவயது மரண அபாயம் தள்ளிப் போகும்; 6,000 முதல் 10,000 அடிகள் நடந்தால் உடல் முழுமையாக ஆரோக்கியமாக இருக்கும். ஒவ்வொரு 1,000 அடிகள் அதிகரிப்புக்கும் 15 சதவீதம் அபாயம் குறையும் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
முக்கியமாக, 60 வயதுக்கு மேற்பட்டோர் தினமும் 6,000 முதல் 10,000 அடிகள் நடந்தால், நடைப்பயிற்சி செய்யாதவர்களைவிட 42 சதவீதம் குறைவான மரண அபாயம் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இது ஆண்கள், பெண்கள் இருவருக்கும் பொருந்தும்.
நடைப்பயிற்சி என்பது வெறும் உடல் பயிற்சி அல்ல, மன அமைதி மற்றும் நீண்ட ஆயுளுக்கான திறவுகோல். தொழில்நுட்பம் நிரம்பிய இன்றைய வாழ்க்கையில், சில நிமிடங்கள் நடந்தாலே உடல் சுறுசுறுப்பு, மன நிம்மதி, ஆரோக்கியம் மூன்றும் நம்முடன் பயணிக்கும்.



