கூல்ஸ்கல்ப்டிங் எனப்படும் எந்திரத்தைப் பயன்படுத்தி கொழுப்பைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கும் சிகிச்சைகள் தொடர்பாக தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக விஎல்சிசி நிறுவனத்திற்கு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ 3 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டிருந்த உடல் எடைக் குறைப்பு விளம்பரம் புகார் மற்றும் விளம்பர கண்காணிப்பு மூலம் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வந்தது. பரிசோதனையில், இந்நிறுவனம் , எடை இழப்பு பற்றிய மிகைப்படுத்தப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டது கண்டறியப்பட்டது, நுகர்வோரை தவறாக வழிநடத்தியது. பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ மீறும் வகையில் அந்த விளம்பரம் நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதாக ஆணையம் முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து, ரூ. 3 லட்சம் அபராதத்துடன் கூடுதலாக, விஎல்சிசி நிறுவனம் அதன் எதிர்கால விளம்பரங்களில் நியாயமற்ற, உண்மைக்கு மாறான வாக்குறுதிகளைத் தவிர்த்து, விதிமுறைகளை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, கூல்ஸ்கல்ப்டிங் சிகிச்சைகள் குறித்த தவறான விளம்பரங்களை வெளியிட்டதற்காக காயா நிறுவனத்திற்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ரூ 3 லட்சம் அபராதம் விதித்தது. காயா நிறுவனத்தின் விளம்பரங்கள் உடல் முழுவதும் கொழுப்பு இழப்பைக் குறிக்கும் வகையில் தவறான முன்புற மற்றும் பின்புறப் படங்களைச் சித்தரித்திருந்தது. அபராதத் தொகையைச் செலுத்தி, ஆணையத்தின் உத்தரவை அந்நிறுவனம் நிறைவேற்றியது.
கூல்ஸ்கல்ப்டிங் மூலம் உடனடி எடை இழப்பு அல்லது நிரந்தர எடைக் குறைப்புக்கு உறுதியளிக்கும் விளம்பரங்களுக்கு இரையாகாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.