எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூடியிருந்த கூட்டத்தின் நடுவே ஆம்புலன்ஸ் வந்ததால் கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி “அதில் நோயாளியே இல்லை என்றும் என்னுடைய ஒவ்வொரு கூட்டத்திலும் இதேபோல ஆளே இல்லாமல் ஆம்புலன்ஸை அனுப்பி மக்களை சிரமத்துக்கு உள்ளாக்கும் வேலையை கேடுகெட்ட கேவலமான அரசு செய்கிறது என குற்றசாட்டை முன்வைத்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், நானும் பல இடத்தில் பார்த்துவிட்டேன். இதே போலதான் செய்கிறார். நேருக்கு நேர் எதிர்க்க தில்லு, தெம்பு, திராணி இல்லாதவர்கள் இப்படி கேவலமான செயலில் ஈடுபடுகிறார்கள். இந்த ஆம்புலன்ஸ் எண்ணையும் ஓட்டுனரின் பெயரையும் குறித்து வைத்துகொண்டு காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள்” என கூறி ஆம்புலன்ஸ் ஓட்டுனரிடம் சத்தம் போட்டார். மேலும் அடுத்த கூட்டத்தில் வேண்டுமென்றே ஆளே இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் ஓட்டி வரும் ஓட்டுனரே அதில் நோயாளியாக ஏற்றி அனுப்பப்படுவார் என எடப்பாடி பழனிசாமி பகிரங்கமாக எச்சரிக்கையும் விடுத்தார்.
இதுகுறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறுகையில், “அவர் செல்லும் இடமெல்லாம் ஆம்புலன்ஸ் வருவதாக எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார். தமிழ்நாட்டில் மொத்தம் 1330 ஆம்புலன்ஸ் உள்ளது. இவை அனைத்தும் உயிர் காக்கும் சேவையை செய்து கொண்டிருக்கிறது.
கிராம பகுதியாக இருந்தாலும், மலைப்பகுதியாக இருந்தாலும், நகரப்பகுதியாக இருந்தாலும் விபத்து நடந்த சில நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் விரைந்து சென்று உயிர்களை காக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள ஆம்புலன்ஸ் சேவை உலகில் எங்கும் கிடையாது.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை கூட்டி விட்டு, நான் செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வருவதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது. ஒரு பழமொழி சொல்வார்களே அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று.. அதுபோல தான் இதுவும்.. முன்னாள் முதல்வர் ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுக்கும் தோணியில் பெயரை நோட் பண்ணு.. வண்டி எண்ணை நோட் பண்ணு என்பது அநாகரிகமான செயல். இந்த அநாகரிகமான செயலை அவர் நிறுத்த வேண்டும்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Read more: சொந்தமா தொழில் தொடங்க ஆசையா..? தற்போதைய டிரெண்டிங் பிசினஸ் எது..? வருமானம் அள்ளலாம்..!!