மயிலாடுதுறை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன், நான்கு சக்கர வாகனம் இல்லாமல் நடந்தே அலுவலகம் சென்ற வீடியோ வைரலான நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை மறுத்து விளக்கமளித்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவின் டி.எஸ்.பியாக பணியாற்றி வரும் சுந்தரேசன், அலுவலக வாகனம் இல்லாமல் நடந்தே பணிக்குச் சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கொலை வழக்கிலும், பிஎஸ்பி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான என்கவுன்டரிலும் விசாரணை செய்ததற்குப் பின்னர், சுந்தரேசன் மயிலாடுதுறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பொறுப்பேற்றதிலிருந்து கள்ளச்சாராயம், மதுபான கடத்தல், சட்டவிரோத டாஸ்மாக் பார்கள் உள்ளிட்டவை மீது கடும் நடவடிக்கைகள் எடுத்தவர். 23 டாஸ்மாக் பார்கள் சீல் வைக்கப்பட்டதோடு, 1,200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இப்படிப்பட்ட நிலையில்தான், டி.எஸ்.பி. சுந்தரேசனின் நான்கு சக்கர அலுவலக வாகனம் மாவட்ட காவல்துறையால் பறிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. முன்னர் அமைச்சரின் பாதுகாப்புக்குச் செல்ல சுந்தரேசன் வாகனத்தைக் கேட்டும், மாவட்ட காவல்துறை அவருக்கு வாகனத்தை தர மறுத்துள்ளது.
இதையடுத்து, சில நாட்கள் தனது இரு சக்கர வாகனத்தில் சுந்தரேசன் பணிக்குச் சென்று வந்தார். இந்தச் சூழலில், தனது வீட்டிலிருந்து மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு அவர் நடந்தே சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் நடந்து சென்றபோது பலர் அவரைத் தங்கள் வாகனத்தில் ஏறிக்கொள்ளுமாறு கேட்டபோதிலும் அவர் மறுத்துவிட்டார்.
இந்தச் சம்பவம் வைரலான நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது. “மயிலாடுதுறை டி.எஸ்.பி.யின் வாகனம் திரும்பப் பெறப்பட்டதாகச் சொல்லப்படும் தகவலில் உண்மை இல்லை. கடந்த 11 ஆம் தேதி முக்கிய பணிக்காக அவரது வாகனம் பெறப்பட்டு மாற்று வாகனம் தரப்பட்டது. இன்று அவர் பயன்படுத்தி வந்த அதே வாகனம் திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது” என விளக்கமளித்துள்ளது.
Read more: நடிகரும், இயக்குநருமான வேலு பிரபாகரன் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!!