ஐயப்பன் விரதம் கடைபிடிக்கும் முறைகள்..!! மாலை அறுந்து போனால் என்ன செய்வது? எதையெல்லாம் செய்யக்கூடாது..?

Ayyappan 2025

இந்துக்களுக்கு மிகவும் புனிதமான மாதமான கார்த்திகை மாதம் தொடங்கியதை அடுத்து, நாடு முழுவதும் ‘சாமியே சரணம் ஐயப்பா’ என்ற கோஷம் வீடுகள் தோறும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது. கார்த்திகை மாதத்தின் முதல் நாளிலேயே ஏராளமான பக்தர்கள் துளசி மாலை மற்றும் ருத்ராட்ச மாலைகளை அணிந்து, புனிதமான மண்டல விரதத்தை தொடங்கியுள்ளனர். இந்த மாதத்தில் சிவனின் தீபத் திருநாள், துளசி கல்யாணம், விநாயகர் சஷ்டி எனப் பல விசேஷங்கள் இருந்தாலும், ஐயப்பனுக்கான விரதமே பக்தர்களின் மனதில் குடிகொண்டு விடுகிறது.


கலியுக கடவுளான ஐயப்பனை வணங்கி, கலிகால தோஷங்களை போக்கவும், ஆன்மிக ஒழுக்கத்துடன் வாழவும், இருமுடி ஏந்தி சபரிமலை சென்று ஐயனின் அருள் பெறவும் பக்தர்கள் யாத்திரை செல்கின்றனர். இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் முறை குறித்துச் சேலம் சாஸ்தா நகர் ஐயப்பன் ஆசிரம அர்ச்சகர் வாசுதேவ் நம்போதரி அவர்கள் விரிவாக விளக்கியுள்ளார்.

அவர் கூறுகையில், “ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் வந்துவிட்டது. ஐயனின் மீது மிகுந்த பயபக்தியோடு மாலை அணிந்து விரதத்தை பக்தர்கள் தொடங்கியுள்ளனர். பொதுவாக, ஐயப்பனுக்கு மாலை அணிய வேண்டும் என்றால், அந்த ஐயனே ஆசைப்பட வேண்டும் என்ற ஒரு நம்பிக்கை உள்ளது. அப்படிப்பட்ட ஐயப்பனுக்கு விரதம் கடைப்பிடிக்கும்போது, அதன் கால அளவு குறித்த சந்தேகம் பல பக்தர்களுக்கு எழும். மண்டல விரதம் 48 நாட்களா அல்லது 41 நாட்களா என்ற கேள்வியும் உள்ளது”

கேரள முறைப்படி பார்த்தால், 41 நாட்கள் விரதம் இருந்தாலே போதுமானது என்று வாசுதேவ் நம்போதரி தெரிவித்தார். கார்த்திகை முதல் நாளில் விரதத்தை தொடங்கினால், சரியாக 41-வது நாளில்தான் சபரிமலையில் மகரஜோதி தரிசனம் தொடங்கிவிடுகிறது. எனவே, 41 நாட்கள் விரதத்தை கடைப்பிடிப்பதே மிகவும் சிறந்தது என்று அவர் குறிப்பிட்டார்.

ஐயப்ப பக்தர்கள் விரத காலத்தில் துளசி மணிமாலை அல்லது ருத்ராட்ச மாலையை அணிவது வழக்கம். முதல்முறையாக மாலை அணிபவர்கள், தொடர்ந்து அதே மாலையை அணிவது குறித்துக் கவலைப்பட தேவையில்லை. அதேபோல், “ஏதாவது ஒரு சமயத்தில் மாலை அறுந்து போனால், புதிய மாலையை வாங்கி அணிந்து விரதத்தை தொடரலாம். அதே மாலையைத்தான் அணிய வேண்டும் என்ற அவசியம் இல்லை” என்று அவர் விளக்கினார்.

வழிபாட்டு முறை : மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள், காலை மற்றும் மாலை என இரு வேளையும் குளித்து, நாள்தோறும் இல்லத்தில் பூஜை செய்து ஐயப்பனை வழிபட வேண்டும்.

உணவு : விரத காலத்தின் முழு நாட்களும் சைவ உணவுகளை மட்டுமே பின்பற்ற வேண்டும்.

அதேபோல், ஐயப்ப விரதத்தின்போது, வீட்டில் உள்ள பெண்கள் மற்றும் தாயார்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்வி பல பக்தர்களின் மனதில் எழுகிறது. இது குறித்து அர்ச்சகர் முக்கிய விளக்கத்தை கொடுத்துள்ளார்.

“இந்த மானிடப் பிறவியில் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் என்பது இயல்பாக நடக்கக்கூடிய ஒரு நிகழ்வு. அதை நாம் பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அந்த மூன்று நாட்கள் மட்டும், பெண்கள் கையால் செய்யப்பட்ட உணவை அருந்துவதைத் தவிர்த்தால் போதுமானது. மற்றபடி அவர்களைப் பார்க்கக் கூடாது, பேசக் கூடாது என்றெல்லாம் கிடையாது” என்று அவர் தெளிவுபடுத்தினார்.

அதேபோல, விரதம் இருக்கும் சமயத்தில் குடும்பத்தில் துக்க நிகழ்வுகள் நடந்துவிட்டால், அப்போது சபரிமலைக்குப் பயணம் மேற்கொள்வது உகந்ததல்ல. துக்கம் ஒரு பெரும் தீட்டாகவே கருதப்படுவதால், மாலையை கழற்றிவிட்டு விரதத்தை நிறுத்துவதே சரியான வழிமுறை என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த மேற்கண்ட புனித வழிமுறைகளுடன், பயபக்தியோடு விரதத்தைக் கடைப்பிடித்து, கலியுக வரதனான ஐயப்பனின் முழு அருளையும் பக்தர்கள் பெற வேண்டும் என அர்ச்சகர் வாசுதேவ் நம்போதரி கேட்டுக் கொண்டார்.

Read More : மின்னல் தாக்கி உடைந்து தானாக சேரும் அதிசய சிவலிங்கம்.. எங்குள்ளது தெரியுமா..?

CHELLA

Next Post

எலுமிச்சம் பழம் ரொம்ப நாள் கெட்டுப்போகாம இருக்கணுமா?. அப்போ இந்த டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க!.

Thu Nov 20 , 2025
எலுமிச்சையை முறையாக சேமித்து வைத்தால், அவை பல நாட்கள் புதியதாகவும், ஜூசியாகவும் இருக்கும். சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். இந்த எளிய வீட்டு வைத்தியங்களைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் ஆண்டு முழுவதும் எலுமிச்சையை அனுபவிக்கலாம். குளிர்சாதன பெட்டியில் எலுமிச்சையை சேமிக்கும்போது கூட, சரியான முறையைப் பின்பற்றாவிட்டால், சில நாட்களுக்குப் பிறகு அவை கெட்டுப்போக ஆரம்பிக்கும். பெரும்பாலான மக்கள் எலுமிச்சையை குளிர்சாதன பெட்டியில் வைத்திருப்பார்கள், ஆனால் அவற்றை ஒரு பிளாஸ்டிக் பையிலோ […]
lemon storage

You May Like