ராஜஸ்தான் மாநிலம் கிஷான்கார்க் பகுதியை சேர்ந்த 32 வயது இளைஞனுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. பல இடங்களில் மணப்பெண் தேடினர். ஆனால் மணப்பெண் அமையவில்லை. இதற்கிடையே தான் ஜிதேந்திரா என்ற திருமண புரோக்கர் அந்த இளைஞரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டார்.
அப்போது ஆக்ராவை சேர்ந்த இளம் பெண்ணை திருமணம் செய்து வைப்பதாக கூறி உறுதி அளித்தார். இளைஞரின் வீட்டினரும் மணப்பெண் கிடைக்காத விரக்தியில் இருந்ததால் ஜிதேந்திராவை நம்பினர். இதையடுத்து ஜிதேந்திரா சுமார் 27 வயது நிரம்பிய பெண் ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார். ஜிதேந்திரா ரூ.2 லட்சத்தை கமிஷனாக பெற்று கொண்டார்.
அதன்பிறகு இருவரின் திருமணமும் ஜெய்ப்பூரில் கோலகலாமாக நடந்தது. திருமணம் முடிந்த பிறகு கிஷான்கார்க் பகுதியில் உள்ள மணமகன் இல்லத்திற்கு புதுமண ஜோடி வந்தனர். இருவருக்கும் முதலிரவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அப்போது அந்த இளம்பெண், இன்று முதலிரவு வேண்டாம். நாம் இருவரும் இன்று ஒன்றாக படுக்கையை பகிர வேண்டாம். எங்களின் பாரம்பரியப்படி முதலிரவில் கணவன் – மனைவி சேர்ந்து இருக்க கூடாது என்றார்.
இதனால் இருவரும் ஒரே அறையில் தனித்தனியாக படுத்து கொண்டனர். அதன்பிறகு நள்ளிரவில் தண்ணீர் குடிக்க புதுமாப்பிள்ளை கண்விழித்தார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தனது அறையில் தனியாக படுத்து கிடந்த மனைவியை காணவில்லை. அவரை வீடு முழுவதும் தேடிப்பார்த்தார் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி வீட்டில் இருந்த நகை, பணமும் மாயமாகி இருந்தது.
திருமண புரோக்கர் ஜிதேந்திராவை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யபட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண் மற்றும் திருமண புரோக்கர் ஜிதேந்திரா ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.