சேலம் ரயில்வே ஜங்ஷன் சைக்கிள் ஸ்டாண்ட் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போர்வையில் சுற்றப்பட்ட நிலையில் ஆண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து தகவலின் பேரில் சூரமங்கலம் போலீசார் குழந்தையின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். இதனை அடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மூன்று தனிப்படைகள் தீவிர விசாரணையில் இறங்கினர்.
அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ஒரு பெண் தோளில் சுமந்து கொண்டு வரும் குழந்தையை அங்கே போட்டுவிட்டுச் சென்றது தெரியவந்தது. அப்பெண் மீண்டும் ஜங்ஷனுக்குச் சென்றதும் அவருடன் வாலிபர் ஒருவர் இணைந்து சென்று கவுண்டரில் டிக்கெட் எடுத்துக் கொண்டு இரவு 1.10 மணிக்கு வரும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் பெங்களூருக்குச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பெங்களூர் ரயிலில் இருந்து இறங்கிய ஜோடி மெஜஸ்டிக் பேருந்து நிலையம் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் விரிவாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அந்த வாலிபர் அணிந்திருந்த டீசர்டில் ஒரு பெயர் காணப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது. அந்த டீசர்டை சென்னை பகுதியில் உள்ள கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் வீரர்களுக்காக ஆர்டர் செய்தது தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரித்த பொழுது குறிப்பிட்டு எண் கொண்ட டீசர்ட் வாங்கிய வாலிபரை போலீசார் கண்டுபிடித்தனர். ஒரு வழியாக குழந்தையை வீசிய வாலிபரை நெருங்கி விட்டோம் என்று மகிழ்ச்சியில் அந்த வாலிபரை பிடித்து விசாரித்த பொழுது தனது டீசர்டை காணவில்லை என போலீசாருக்கு அதிர்ச்சியை கொடுத்தார்.
தற்போது அந்த பெண் பெங்களூரைச் சேர்ந்தவராகவும், வாலிபர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். சிசிடிவி காட்சிகளில் சிக்கிய அந்த ஜோடியின் புகைப்படங்கள் தற்போது சேலம் மற்றும் பெங்களூர் பகுதிகளில் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களை யாரேனும் அடையாளம் காண்பவர்கள் சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை தொடர்புகொள்ளுமாறு போலீசார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Read more: இளம் வயதிலேயே முடி உதிர்வு பிரச்சனையா..? வீட்டிலேயே தயாரிக்கலாம்..!! சூப்பர் ரிசல்ட்..!!



