துபாயில் இருந்து டெல் அவிவ் நோக்கிச் சென்ற ஃபிலைதுபாய் (Flydubai – FZ1073) விமானத்தில், இணை விமானி திடீரென விமான அமைப்புகளைச் சேதப்படுத்த முயன்று, கேப்டன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த நிலையிலும், இந்தியாவைச் சேர்ந்த கேப்டன் ஸ்மித் மச்சார் ஆபத்துக்கான எச்சரிக்கை மணி அடித்து, விமானத்தை சுதாரித்து பாதுகாப்பாகத் தரையிறக்க உதவினார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்பு அவர் பங்கேற்ற பாட்காஸ்ட் (Podcast) வீடியோ ஒன்றில் ஆபத்து காலங்கள் குறித்துப் பேசிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
“அங்க எதாவது ஆபத்து நடந்தா நம்மள யாரு காப்பாத்துவா?”
கடந்த அக்டோபர் 2025-இல் வெளியான ‘Bonafide Banter’ என்ற பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ஸ்மித் மச்சார், “நாம் வானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது ஏதேனும் விபரீதம் நடந்தால், நம்மை யார் காப்பாற்றுவார்கள்?” என்று கேள்வி எழுப்பி, பயிற்சி பெற்ற விமானப் பணியாளர்களின் முக்கியத்துவத்தை விவரித்திருந்தார்.
அப்போது அவர், “விமானத்தில் ஒரு மருத்துவர் பயணிப்பது அதிர்ஷ்டம். ஆனால் அவர் இல்லையென்றாலும், விமானப் பணியாளர்கள் அவசர காலங்களை எதிர்கொள்ளத் தகுந்த பயிற்சி பெற்றவர்கள். மக்கள் விமானப் பணியாளர்களைப் பார்க்கும் விதம் கவலையளிக்கிறது. ஆனால் சூழல் கைமீறிப் போகும்போது அவர்கள் மட்டுமே நமக்குத் தேவைப்படுவார்கள்” என்று கூறியிருந்தார்.
மேலும், விமானப் பயணத்தின் போது கவனச்சிதறலைத் தவிர்க்க ஆழமான உரையாடல்களை விமானிகள் தவிர்க்க வேண்டும் என்றும், புயல் அல்லது மோசமான வானிலையின் போது அமைதியாக இருப்பது பயத்தினால் அல்ல, தீவிர கவனத்தினால் மட்டுமே என்றும் அவர் விளக்கியிருந்தார்.
13 ஆண்டுகளுக்கும் மேலான பறக்கும் அனுபவமும், 9,750 மணி நேரத்திற்கும் மேலான விமானப் பயணப் அனுபவமும் கொண்டவர் ஸ்மித் மச்சார்.
FZ1073 விமானத்தில் நடந்தது என்ன?
174 பயணிகள் மற்றும் 27 குழந்தைகளுடன் துபாயில் இருந்து புறப்பட்ட FZ1073 விமானம், நடுவானில் 34,000 அடியிலிருந்து திடீரென 17,000 அடிக்குக் கீழே இறங்கி அவசர எச்சரிக்கை சமிக்ஞைகளை அனுப்பியது. இணை விமானியின் தாக்குதலால் ரத்த வெள்ளத்தில் காயமடைந்த கேப்டன் ஸ்மித், அசாத்திய தைரியத்துடன் செயல்பட்டு விமானத்தைச் சவூதி அரேபியாவின் தபூக் (Tabuk) நகரிலுள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கினார்.
பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
படுகாயமடைந்த நிலையிலும் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றிய கேப்டன் ஸ்மித் மச்சாரைப் பிரதமர் நரேந்திர மோடி, ஹீரோ எனப் பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து தனது ‘X’ தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “மிகப்பெரிய ஆபத்தான சூழலிலும், கடுமையான காயங்களுக்கு நடுவிலும் கேப்டன் ஸ்மித் மச்சார் காட்டிய தைரியமும் மன உறுதியும் போற்றத்தக்கது. அவரின் இந்த வீரம் நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றி, ஒரு பெரிய துயரத்தைத் தடுத்துள்ளது. இந்தியாவே அவரைக் கண்டு பெருமை கொள்கிறது” எனக் குறிப்பிட்டு, அவர் விரைவில் குணமடையத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.



