2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது..
திமுக தங்கள் வலுவான கூட்டணி உடன் ஆட்சியை தக்க வைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.. எப்படியாவது இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று அதிமுக கூட்டணி தீவிரம் காட்டி வருகிறது.. நாம் தமிழர் தனியாக தேர்தலை எதிர்கொள்ள உள்ளது.. தவெக தலைமையில் ஓபிஎஸ், டிடிவி ஆகியோர் இணைந்து கூட்டணி உருவாகும் என்று கூறப்படுகிறது.. பாமக, தேமுக இன்னும் தங்கள் கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை..
இந்த நிலையில் திமுக ‘என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி’ என்ற பிரச்சாரத்தை தொடங்கி உள்ளது.. சென்னை தேனாம்பேட்டை அருகே முதல்வர் ஸ்டாலின் இன்று இந்த பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார்.. வாக்குச்சாவடிகளை பலப்படுத்தும் திமுகவின் இந்த பிரச்சாரம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் திமுகவினரை உற்சாகத்துடன் செயல்பட வைக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வீடு வீடாக செல்லும் பூத் கமிட்டிகளில் மகளிர் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று திமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது..
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ எந்த ஷா வந்தாலென்ன? எத்தனை திட்டம் போட்டாலென்ன? டெல்லி பாதுஷா என்ற நினைப்போடு தமிழ்நாட்டுக்கு வர நினைத்தால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் எங்களது கருப்பு சிவப்புப் படை உங்களுக்குத் தக்க பாடம் புகட்டும்! தமிழ்நாடு என்றைக்குமே ஆணவம் பிடித்த டெல்லிக்கு Out of Control தான்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : ”2026 தேர்தலில் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெல்லும்..” பொதுக்குழுவில் இபிஎஸ் உறுதி..!



