பாஜகவின் மாநிலத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நடிகை குஷ்பு, தவெக தலைவர் விஜய்யின் அரசியல் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தவெக தனது முதல் தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.. அக்கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்தும் பணியில் விஜய் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் தவெகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை விரைவுப்படுத்த My Tvk என்ற உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் நேற்று அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து 1967, 1977 தேர்தல் மாதிரி 2026 தேர்தலும் அமையப் போகிறது எனக் கூறினார். இந்த சூழலில், பாஜகவின் புதிய மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்ட நடிகை குஷ்பு, விஜயின் அரசியல் பயணம் குறித்து தனது கருத்துகளை கூறினார்.
அவர் கூறுகையில், “விஜய் எனக்கு ஒரு தம்பி மாதிரி. அரசியலுக்கு வந்த உடனேயே வெற்றி கிடைக்காது. விஜய்க்கு அது நன்றாகத் தெரியும். வெளியே இருந்தபடி அது சரியில்லை, இது சரியில்லை என்று சொல்லாமல் விஜய் இறங்கி வேலைப் பார்க்கிறார், அது நல்லதுதான். மேலும் வரும் தேர்தலில் அவர் வெற்றி பெறுவாரா என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். எம்.ஜிஆர், கருணாநிதி, ஜெயலலிதா காலங்களில் மக்கள் மனநிலை வேறு மாதிரி இருந்தது, இப்போது மக்களின் மனநிலை வேறு மாதிரி உள்ளது எனவும் குஷ்பு தெரிவித்தார்.
குஷ்பு இதற்கு முன் திமுக, காங்கிரஸ் கட்சிகளில் இருந்தவர். பின் பாஜகவில் 2020இல் இணைந்து, ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். ஆனால், பின்பு மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டு, திமுகவுக்கு எதிராகப் பலமுறை பேசினார். சமீப காலங்களில் பாஜகவில் தனக்கு முக்கியதுவம் அளிக்கப்படவில்லை என ஆதங்கத்துடன் இருந்த குஷ்புவிற்கு தற்போது மாநில துணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
Read more: நாளை அறிவிக்கப்பட்ட ஸ்டிரைக் வாபஸ்.. சிலிண்டர் விநியோகம் தடையின்றி தொடரும்..!!