நாளுக்கு நாள் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் உச்சமாக இன்று செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) பார்க்கப்படுகிறது. இன்று அனைத்துத் துறைகளிலும் பரவலாகப் பயன்படும் AI, சாதாரண பொதுமக்களின் அன்றாட வாழ்விலும் ஓர் அங்கமாகிவிட்டது. மனித வாழ்வின் முக்கிய அம்சமாக மாறிவிட்ட இந்த AI தொழில்நுட்பம், வரும் காலத்தில் நமது வாழ்க்கைத் தரத்தில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மனித வாழ்க்கையை AI எப்படி மாற்றும்..?
செயற்கை நுண்ணறிவு அம்சத்தால் மனிதர்களின் வாழ்க்கை முறை பலமடங்கு எளிமைப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேகமும் நேரக் குறைப்பும் : செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஒரு வேலையை மனிதர்களை விடவும் பல மடங்கு அதிக வேகத்தில், எந்தப் பிழையும் இல்லாமல் செய்து முடிக்கும். பெரிய கணக்குகளைப் போடுவது, சிக்கலான தரவுகளை ஆராய்வது போன்ற வேலைகளுக்கு ஆகும் நேரம் வெகுவாக குறையும். இதன் மூலம் மனிதர்களின் உழைப்பு நேரம் மிச்சப்படுத்தப்பட்டு, ஆக்கப்பூர்வமான வேலைகளில் அவர்கள் கவனம் செலுத்த முடியும்.
துல்லியமான பதில்கள் : கோடிக்கணக்கான தரவுகளை கொடுத்தாலும், அவற்றை ஒரு சில நிமிடங்களில் ஆராய்ந்து அதற்கான சரியான மற்றும் துல்லியமான விடையை AI வழங்கும் சிறப்பு திறனை கொண்டிருக்கும். உதாரணமாக, மருத்துவத் துறையில் நோய்களைக் கண்டறிவது, சிகிச்சை முறைகளை முடிவு செய்வது போன்றவற்றில் AI மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மனிதர்களால் தவறவிடப்படும் நுண்ணிய விவரங்களைக்கூட AI சரியாகக் கண்டறிந்து, மருத்துவச் சிகிச்சையின் தரத்தை உயர்த்தும்.
கடினமான ஆய்வுகளை எளிமையாக்குதல் : பூமி முதல் விண்வெளி வரை என உலகின் பல்வேறு அம்சங்கள் குறித்து விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆய்வுக்கும் குறிப்பிட்ட கால அளவு தேவைப்படும் நிலையில், இனி வரும் காலங்களில் அத்தகைய சிக்கலான ஆராய்ச்சிகளைச் செயற்கை நுண்ணறிவு மிகவும் எளிதானதாகவும், விரைவாகவும் மாற்றிவிடும். புதிய கண்டுபிடிப்புகளுக்கான கதவுகளை AI வேகமாகத் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தடையற்ற சேவை : செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் இரவு, பகல் பாராமல், எந்தவிதமான இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து உழைக்கும் திறன் கொண்டவை. இதன் காரணமாக, பொதுமக்களால் எந்த நேரத்திலும் சேவைகளை தங்கு தடையின்றி பெற முடியும். தகவல் பரிமாற்றம், வாடிக்கையாளர் சேவை, உற்பத்திச் சங்கிலி போன்ற துறைகளில் இந்தத் தொடர்ச்சியான சேவை பெரிய மாற்றத்தை கொண்டு வரும்.



