இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்கள் சமையலுக்கு எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை பயன்படுத்தி வருகின்றனர். சிலிண்டர் வந்தவுடன் சீல் சரியாக உள்ளதா, எடை சரியாக உள்ளதா என்பதை பொதுமக்கள் கவனமாகச் சரிபார்க்கின்றனர். ஆனால் சிலிண்டரின் மேற்புறத்தில், கைப்பிடியின் கீழ் பொறிக்கப்பட்டிருக்கும் குறியீடு குறித்து பலருக்கும் தெளிவான புரிதல் இல்லை. அதுதான் சோதனை தேதி.
எல்பிஜி சிலிண்டர்கள் வலுவான எஃகால் தயாரிக்கப்படுவதாகவும், BSI 3196 தரநிலைகளின்படி உற்பத்தி செய்யப்படுவதாகவும், வெடிபொருட்களின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் (CCOE) மேற்பார்வையில் அவை ஆய்வு செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. நீண்ட கால பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் இந்த கேஸ் சிலிண்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
சிலிண்டர் முதல் முறையாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு சோதனைக்கு உட்படுத்தப்படும். அதன் பின்னர் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை சோதனை செய்யப்படும். சோதனை எப்போது செய்யப்பட வேண்டும் என்பதை அறிய சிலிண்டரில் ஒரு எழுத்தும் ஒரு ஆண்டுச் சுட்டெண்ணும் பொறிக்கப்பட்டிருக்கும்.
A – ஜனவரி முதல் மார்ச் வரை
B – ஏப்ரல் முதல் ஜூன் வரை
C – ஜூலை முதல் செப்டம்பர் வரை
D – அக்டோபர் முதல் டிசம்பர் வரை
அதன் பின் வரும் எண் ஆண்டை குறிக்கும். உதாரணமாக, B26 என்ற குறியீடு இருந்தால், அந்த சிலிண்டரை 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்திற்குள் சோதனை செய்ய வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
இந்த குறியீடு சிலிண்டர் காலாவதியானது அல்லது பயன்படுத்த முடியாது என்பதைக் குறிக்கவில்லை. இது எண்ணெய் நிறுவனங்கள் உள் நிர்வாகத் தேவைக்காக பயன்படுத்தும் சோதனை காலக் குறியீடு மட்டுமே என்ற தெளிவை அவர்கள் வழங்கியுள்ளனர். சோதனை தேதியைக் கடந்த சிலிண்டர்கள் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரித்தெடுத்து சோதனை செய்யப்படுகின்றன. சோதனையில் தோல்வியடையும் சிலிண்டர்கள் மாற்றப்படுகின்றன. தேர்ச்சி பெற்றவைகள் மீண்டும் வண்ணம் பூசி, புதிய சோதனை தேதியுடன் சந்தைக்கு அனுப்பப்படுகின்றன.
சந்தைக்கு விநியோகிக்கப்படும் அனைத்து சிலிண்டர்களும் செல்லுபடியாகும் சோதனை தேதிக்குள் இருப்பது உறுதி செய்யப்படுவதாகவும், விநியோக முகவர்களுக்கும் இதற்கான உரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்ட பிறகு, சோதனை தேதியால் ஏற்பட்ட எல்பிஜி விபத்துகள் குறித்த எந்த அறிக்கையும் இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் புதிய சிலிண்டர் பெறும் போது அதன் சோதனை தேதியை கவனமாகச் சரிபார்க்க வேண்டும். சோதனை காலம் கடந்த சிலிண்டர் வழங்கப்பட்டால் உடனடியாக எரிவாயு விநியோக முகவரைத் தொடர்பு கொள்ள வேண்டும். அதேபோல் சிலிண்டரின் சீல், எடை, வெளிப்புற நிலை ஆகியவற்றையும் சோதிக்க வேண்டும். துருப்பிடித்த அல்லது சேதமடைந்த சிலிண்டர் வந்தால், அதை பயன்படுத்தாமல் உடனடியாக புகார் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Read more: ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் யூஸ் பண்றீங்களா? கவனம்..! புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்!



