பீகார் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது நிகழ்ந்த ஒரு நெகிழ்ச்சியான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அரரியா பகுதியில் பிரச்சாரம் செய்யும் போது ஒரு சிறுவனுடன் நடந்த உரையாடலில் ஈடுபட்ட காட்சி தான் இதற்கு காரணம். அந்த வீடியோவில், ராகுல் காந்தி கூட்டத்தில் நடந்து செல்லும்போது, ஒரு சிறுவன் அவரை அணுகி கைகுலுக்குகிறான். பிறகு “நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள், சார்?” என்று கேட்கிறார்..
அதற்கு ராகுல் காந்தி “என் வேலை முடிந்த பிறகு!” என்று சிரித்துக்கொண்டு பதிலளித்தார்.. இந்த உரையாடல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, கடுமையான தேர்தல் பிரச்சாரத்தின் நடுவே ராகுல் காந்தியின் எளிமையான, நகைச்சுவை மிக்க பக்கத்தை வெளிப்படுத்துகிறது எனப் பாராட்டப்படுகிறது.
இது முதல் முறை அல்ல
ராகுல் காந்தியின் திருமண நிலை குறித்து மக்கள் முன்பு பலமுறை ஆர்வம் காட்டியுள்ளனர். டெல்லியில் உள்ள பிரபலமான கண்டேவாலா மிட்டாய் கடைக்கு தீபாவளி நேரத்தில் சென்றபோது, கடை உரிமையாளர் சுஷாந்த் ஜெயின் நகைச்சுவையாக, “ராகுல் ஜி, தயவுசெய்து விரைவில் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் திருமண இனிப்புகளை நாங்கள்தான் தயாரிக்கணும்!”
என்று கூறியிருந்தார்.
அந்த உரையாடலும் அப்போது வைரலாகி, ராகுல் காந்தி “இந்தியாவின் மிகத் தகுதியான திருமணமானவர் அல்லாத அரசியல்வாதி” என மக்கள் இடையே நகைச்சுவையாகப் பேசப்பட்டார்.
பீகாரில் சாதனை வாக்கு பதிவு
இதனிடையே, பீகார் மாநிலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த தேர்தல்களை விட அதிக உற்சாகத்துடன் நடைபெற்றது. 18 மாவட்டங்களின் 121 தொகுதிகளில் 64.7% வாக்குகள் பதிவு செய்யப்பட்டன — இது 1998 ஆம் ஆண்டின் 64.6% என்ற சாதனையை விட சிறிது அதிகம். இந்த அதிகமான வாக்கு பதிவு, பீகார் தேர்தல் இந்த முறை கடுமையாக போட்டியிடப்படும் ஒரு முக்கியமான தேர்தலாக மாறி வருவதை காட்டுகிறது.



