வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் தற்போது பெருங்குடல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவது, சுகாதாரத் துறையை கதிகலங்க செய்துள்ளது.
அமெரிக்காவில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பெருங்குடல் புற்றுநோய் நான்காவது அதிகமாக காணப்படும் புற்றுநோயாகும். அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில், ஆண்களில் 24 பேரில் ஒருவருக்கும், பெண்களில் 26 பேரில் ஒருவருக்கும், அவர்களின் வாழ்நாளில் இந்த நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்தியாவிலும் இதே போலவே கவலைக்கிடமான எண்ணிக்கை வெளியாகியுள்ளது. தேசிய மருத்துவ நூலகத்தின் தரவுகளின்படி, நகரப் பகுதிகளில் இந்த நோய் அதிகளவில் பதிவு செய்யப்படுகிறது. ஆண்களில் ஒரு லட்சத்திற்கு 7.2 பேர், பெண்களில் 5.1 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். உணவுப் பழக்க வழக்கங்கள், சுறுசுறுப்பற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம், புகைபிடித்தல், மற்றும் மதுபானம் உட்கொள்வது போன்ற காரணங்களால் இந்த நோய் ஏற்படுகின்றன.
இந்த நோய் ஏற்படுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று மரபணு. குடும்பத்தில் இதற்கு முன் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால், அடுத்த தலைமுறையிலும் ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால், மரபணுவைப் போல் கட்டாயம் இல்லாத காரணிகளும் நிறைய உள்ளன. குறிப்பாக பதப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு இறைச்சியின் அதிக பயன்பாடு, நார்ச்சத்து குறைவான உணவுகள், உடலாக்க செயல்பாடுகள் குறைவான வாழ்க்கை முறை ஆகியவை நோயைத் தூண்டக்கூடியவை.
பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் பெரும்பாலும் தெளிவாகத் தெரியாது. சிலர் அதனை சாதாரண குடலிழுப்பு அல்லது மலச்சிக்கலாகவே நினைத்து புறக்கணிக்கிறார்கள். ஆனால், மலத்தில் இரத்தம் காணப்படுவது, வயிற்று வலி, மலத்தின்மை, திடீர் எடை குறைதல், குமட்டல் அல்லது மலத்தின் வடிவத்தில் மாற்றம் போன்றவை கவனிக்கப்பட வேண்டிய முக்கிய அறிகுறிகள்.
மூலநோயின் காரணமாக வரும் இரத்தம் பொதுவாக பிரகாசமான சிவப்பு நிறமாக இருக்கும். ஆனால், பெருங்குடல் புற்றுநோயின் காரணமாக வரும் இரத்தம் கருப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் என்பது மக்களுக்குள் பெரும்பாலும் புரியாத ஒரு முக்கியமான அம்சமாகவே உள்ளது.
இந்த நோயின் பரவலை கட்டுப்படுத்த, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வழக்கமான பரிசோதனையை பரிந்துரைக்கிறது. குறிப்பாக, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், மலத்தில் இரத்தம் போன்ற அறிகுறிகள் நீண்ட நாட்கள் தொடர்ந்தால், மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகிறது.
பெருங்குடல் புற்றுநோய் இப்போது பெரியவர்களுக்கு ம்ட்டுமின்றி இளைஞர்களிடமும் அதிகரித்து வருகிறது. டெல்லி புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவ நிபுணர் டாக்டர் மீனாட்சி சர்மா கூறுகையில், “சமீபகாலமாக 40 வயதுக்குள் இந்த நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. ஒழுங்கான பரிசோதனை, நார்ச்சத்து நிறைந்த உணவுமுறை, மற்றும் ஒழுங்கான உடற்பயிற்சி ஆகியவை நோய் தடுப்பில் மிக முக்கிய பங்காற்றுகின்றன” என்று தெரிவித்துள்ளார்.