கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சி நிச்சயம் வலிமை பெறும். அதிமுகவில் பிரிந்து சென்ற சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரையும் மீண்டும் கட்சியில் ஒருங்கிணைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
அதிமுக என்பது எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட பேரியக்கம். கடந்த 50 ஆண்டுகளில் கொங்கு மண்டலத்திற்கு, குறிப்பாக கோவைக்கு அளப்பரிய வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தது அதிமுக ஆட்சிதான் என்றார். தமக்கு அனைத்து அதிகாரங்களையும் அடையாளத்தையும் கொடுத்த இயக்கம் இதுவே என்றும், நான் எங்கும் செல்லாமல் தொடர்ந்து மக்களோடு மக்களாக நின்று களப்பணியாற்றி வருவதாகவும் அவர் கூறினார். சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் அனைவரும் இப்போதும் தம்மோடு மிகுந்த பாசத்துடனும் இணக்கத்துடனும் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் உள்ளிட்ட பல பகுதிகளில் கட்சியின் வாக்கு வங்கி சரிவை சந்தித்துள்ளதை சுட்டிக்காட்டிய வேலுமணி, கள நிலவரங்களை தலைமை தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றார். கடந்த காலங்களில் நான் தேர்தல் பொறுப்பாளராக இருந்தபோது தாராபுரத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று இயக்கம் வலிமையோடு நின்றது. அண்மைக் காலங்களில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சரியான ஒருங்கிணைப்பு இன்மையால் வெற்றிகள் கைநழுவிப் போயுள்ளதாக தெரிவித்தார்.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது டிடிவி தினகரன் கோரிய 20 தொகுதிகளை வழங்கியிருந்தால் அப்போதே மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்திருக்கும் என்றும், 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுடனான கூட்டணி நீடித்திருந்தால் இன்று தமிழகத்தில் இருந்து 4 மத்திய அமைச்சர்களை உருவாக்கியிருக்க முடியும் என்றும் தெரிவித்தார். பலமான கூட்டணிகளை அடுத்தடுத்து இழந்ததே கட்சிக்கு பின்னடைவாக அமைந்தது.
அதிமுகவை மீண்டும் அசைக்க முடியாத சக்தியாக மாற்ற சசிகலா, தினகரன், ஓபிஎஸ் மற்றும் கட்சியை விட்டு விலகிச் சென்ற அனைவரையும் எடப்பாடி பழனிசாமி ஒன்றுதிரட்ட வேண்டும். செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் தவெக-வை நோக்கிச் செல்வதற்கு ஏதேனும் தவிர்க்க முடியாத நெருக்கடிகளும் அரசியல் அழுத்தங்களும் காரணமாக இருந்திருக்கலாம் என்றார்.



