மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் 28 ஆண்டுகளாக நீடித்த திருமண வாழ்க்கையை முடிக்க, ஒரு பெண் கையாண்ட யுக்தி தற்போது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
1998ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதியினர், கணவரின் வேலை காரணமாக அடிக்கடி பிரிந்து வாழ வேண்டிய சூழ்நிலையில் இருந்தனர். காலப்போக்கில் ஏற்பட்ட மனக்கசப்பால், 2015ஆம் ஆண்டு முதல் மனைவி தனியாக வசித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, சட்டப்படி விவாகரத்து பெற முடிவு செய்த அந்தப் பெண், 2021ஆம் ஆண்டு குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அதில், “என் கணவர் ரகசியமாக இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்” என்று குற்றம்சாட்டியதுடன், மாதாந்திர பராமரிப்பு தொகையும் கோரினார். இதை நிரூபிக்க, கணவர் மற்றொரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் இருக்கும் பெண்ணே தனது கணவரின் “இரண்டாவது மனைவி” என்று அவர் வலியுறுத்தினார்.
விசாரணை நேரத்தில் கணவர் ஆஜராகாத நிலையில், அந்தப் புகைப்படத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, நீதிமன்றம் ஒருதலைப்பட்சமாக விவாகரத்து வழங்கியது. ஆனால் புகைப்படத்தில் இருந்த பெண் வேறு யாரும் இல்லை.. கணவரின் சொந்த சகோதரியே! குடும்ப நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை மாற்றி பயன்படுத்தி, தவறான உறவாக சித்தரித்து விவாகரத்து பெற்றது வெளிச்சத்துக்கு வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், உடனடியாக மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கில் அவரது தரப்பு வழக்கறிஞர் ரவி சங்கர் குப்தா, “புகைப்படத்தில் உள்ள பெண் ஏற்கனவே திருமணமானவர். உண்மையை சரிபார்க்காமல் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு செல்லாது” என்று வாதிட்டுள்ளார். தற்போது, மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் இந்த மனுவை ஏற்று, குடும்ப நீதிமன்றத்தின் ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.
Read more: உங்களிடம் SBI கணக்கு உள்ளதா? மிகச் சிறந்த நற்செய்தி… ரூ. 10,000 தள்ளுபடி கிடைக்கும்..!



