கடந்த ஓராண்டாக தொடர்ந்து உச்சத்தில் பறந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது சற்று ஆசுவாசமடைந்து நிலையாக உள்ளது. சில நாட்கள் லேசான ஏற்றம் கண்டாலும், பெரியளவிலான விலை உயர்வு இல்லாமல் வர்த்தகமாகி வருகிறது. இந்தச் சூழலில், வரும் காலங்களில் தங்கத்தின் விலை எப்படி இருக்கும், இனியும் அதன் ஏற்றம் தொடருமா என்பது குறித்துப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கொரோனாவுக்கு பிறகு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதன் ஏற்றம் கிட்டத்தட்ட ஜெட் வேகத்தில் இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் ரூ. 12,000 வரை விலை உயர்ந்தது. ஆனால், இப்போது சில வாரங்களாக தங்கம் விலை, 2-3 நாட்கள் ஏறுவது, பிறகு சரிவது என மாறி மாறி இருப்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
இது குறித்து ஆனந்த் சீனிவாசன் தனது யூடியூப் பக்கத்தில் பேசும்போது, “தங்கம் விலை கடந்த 2 ஆண்டுகளில் 50 முதல் 60% வரை ஏறி இருக்கிறது. எனவே, இப்போது அது கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கும்” என்று கருத்து தெரிவித்தார்.
“ரஷ்யா பட்ஜெட் பற்றாக்குறை காரணமாக தங்கத்தை விற்பதாக சில தகவல்கள் பரவின. ரஷ்ய ஊடகங்களே இந்தத் தகவலைப் பரப்பியபோதும், அவற்றைக் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. ரஷ்ய ஊடகங்கள் சொல்வதை நம்புவது தவறு. ஒரு குழப்பத்தை ஏற்படுத்தவே இந்தச் செய்திகள் பரப்பப்படுகின்றன” என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், ஒரு நாட்டிற்கு பட்ஜெட் பற்றாக்குறை ஏற்பட்டால், அவர்கள் தங்கத்தை விற்க மாட்டார்கள். மாறாக, அதிக ரூபல்களை அச்சடிப்பார்கள். அதுபோலச் செய்தால் பணவீக்கம் அதிகரிக்கும். இதற்கும் தங்கம் விலை உயர்வதற்கும் நேரடி தொடர்பு இல்லை. அந்நியச் செலாவணிப் பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே நாடுகள் தங்கத்தை விற்கும். அதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை என்றும் அவர் விளக்கினார்.
அடுத்த ஆண்டுக்கான இலக்கு :
‘ரிச் டாட் பூர் டாட்’ புத்தக ஆசிரியர் ராபர்ட் கியாசக்கி போன்ற சிலர் தொடர்ந்து பெரிய ஆபத்து வந்துவிட்டது என்று எச்சரித்து வந்தாலும், அதை நம்பி அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம் என்றும் ஆனந்த் சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார். உதாரணமாக, ராபர்ட் கியாசக்கியின் ஆலோசனையை கேட்டு இந்தியாவில் கடன் வாங்கி ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக எந்தப் பலனும் இல்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த ஆண்டைப் போலவே, அடுத்த ஆண்டும் தங்கம் விலை 50% வரை உயருமா என்ற கேள்விக்கு, “நிச்சயம் ஏறாது. அதிகபட்சம் 5% முதல் 15% வரை மட்டுமே உயர வாய்ப்புள்ளது. இதுவும் அமெரிக்க ஃபெடரல் வங்கியின் முடிவுகளைப் பொறுத்தே அமையும். அடுத்த 6 மாதங்களுக்கு தங்கம் விலை இப்படித்தான் இருக்கும். ரெஸ்ட் எடுக்காமல் தொடர்ந்து ஏறிக் கொண்டே இருக்காது” என்று ஆனந்த் சீனிவாசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
Read More : செம குட் நியூஸ்..!! மாணவர்களுக்கு AI வசதியுடன் கூடிய இலவச லேப்டாப்..!! முதலமைச்சர் முக.ஸ்டாலின் அதிரடி..!!



