அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரச்சாரப் பயணங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஓ.பன்னீர்செல்வம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டார். தலைமைக் கழக நிர்வாகிகளுடனான கூட்டத்திற்குப் பிறகு, ஓபிஎஸ் ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன், ‘தற்போது எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை’ என்று அறிவித்திருந்தார்.
இபிஎஸ் முதல்வர் வேட்பாளராக இருக்கும் வரை கட்சியில் இணைய மாட்டோம் எனவும் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு வருகை தந்தபோது, அவரைச் சந்திக்க ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கோரியிருந்தார். ஆனால், அவருக்குச் சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டதால், அது பல வகையான யூகங்களைக் கிளப்பியது. இதன் தொடர்ச்சியாகவே, ஓபிஎஸ் தரப்பு பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தது.
கூட்டணியில் இருந்து விலகிய ஓபிஎஸ் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வந்த நிலையில் ஓபிஎஸ் திடீரென முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதேசமயம் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய போவதாக தகவல் வெளியானது.
இந்த யூகங்களுக்கு மத்தியில், ஓ. பன்னீர்செல்வம் அவசரமாக டெல்லிக்கு சென்று, உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்து ஆலோசனை நடத்தியது தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது. ஆனால் மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசியதாக ஓபிஎஸ் கூறினார்.
இப்படியான நிலையில் கோவையில் நேற்று இரவு அண்ணாமலை மற்றும் ஓபிஎஸ் இருவரும் சந்தித்துக் கொண்டது பேசு பொருளாகியுள்ளது. அதிமுக தொண்டர் மீட்பு குழு நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு சென்றுள்ளனர். சமீபத்தில் இருவரும் தனித்தனியாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்து பேசிய நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. இதனால் மீண்டும் NDA கூட்டணியில் ஓபிஎஸ் இணைய வாய்ப்புள்ளதாக யூகங்கள் எழுந்துள்ளது.



