சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய பாலா, இப்போது வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி இருந்தார். ஆனால், சில காரணங்களால், இப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். அதன்பின் இந்த படத்தை அருண் விஜய் மற்றும் ரோஷினி நடிப்பில் பாலா இயக்கி வருகிறார்.
இந்நிலையில், வணங்கான் படப்பிடிப்பு கன்னியாகுமரி சுற்றுவட்டார பகுதிகளில் நடந்து வருகிறது. இங்கு கேரள மாநிலத்தை சேர்ந்த துணை நடிகர், நடிகைகள் நடித்து வருகின்றனர். இப்படத்தின் சூட்டிங் 3 தினங்கள் நடந்த நிலையில், துணை நடிகர்-நடிகைகளுக்கு கூறியபடி சம்பளத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து துணை நடிகைகளில் ஒருவரான லிண்டா, ஒருங்கிணைப்பாளர் ஜிதினிடம் கேட்டிருக்கிறார். அப்போது கோபமடைந்த அவர், லிண்டாவை கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் காயமடைந்த லிண்டா, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.