திருமண உறவுகளில் ஏற்படும் சாதாரண கருத்து வேறுபாடுகள் காரணமாக ஒருவர் தற்கொலை செய்துகொண்டால், அந்த நிகழ்வை மட்டும் அடிப்படையாக கொண்டு அவரது மனைவியை “தற்கொலைக்குத் தூண்டியவர்” என குற்றவாளியாக்க முடியாது என்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது.
2019 நவம்பர் 26 அன்று மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் ஒருவர் இரயில் முன் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவரின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அதில், தனது மருமகள் அடிக்கடி அற்ப விஷயங்களுக்காக சண்டையிடுவதாகவும், வாய்மொழியாக அவமதிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும், அவர் தனது மகனுக்கு தெரிவிக்காமல் அடிக்கடி பெற்றோர் வீட்டிற்கு செல்வதாகவும், கணவர் மீது பொய் வழக்குகள் தொடரப்படும் என மிரட்டியதாகவும் தந்தை கூறினார். இந்த தொடர் மன அழுத்தம் மற்றும் துன்புறுத்தல்களால் விரக்தியடைந்த தனது மகன் தற்கொலை செய்துகொண்டதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார்.
தந்தையின் புகாரின் அடிப்படையில், பாதிக்கப்பட்டவரின் மனைவி மீது தற்கொலைக்குத் தூண்டியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அப்பெண் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட FIR-ஐ ரத்து செய்து, வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக குற்றம் சாட்டுவதற்கு, அந்த செயலில் தெளிவான நோக்கம் இருக்க வேண்டும் என்று கூறியது. அந்த நோக்கம் நிரூபிக்கப்படாத நிலையில் தற்கொலை தூண்டுதல் குற்றச்சாட்டு பொருந்தாது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
மேலும், சாதாரண திருமண தகராறுகள், வாய்மொழி அவமதிப்பு அல்லது ஒருவர் பெற்றோர் வீட்டிற்கு செல்வது போன்ற செயல்கள் தற்கொலைக்குத் தூண்டுதல் என வகைப்படுத்த முடியாது. ஒருவரைத் தற்கொலை செய்ய வேண்டும் என்ற தெளிவான நோக்கம் இருந்தால் மட்டுமே இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 அல்லது பாரதிய நியாய சம்ஹிதை 2023-இன் பிரிவு 108-இன் கீழ் வழக்கு நிலைநிறுத்த முடியும்.
கணவன்–மனைவி இடையேயான சாதாரண வாக்குவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் குற்றச்சாட்டாக கருத முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்றம், அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கையும் நடைபெற்று வந்த விசாரணையையும் ரத்து செய்து உத்தரவிட்டது.
Read more: புனர்பூசம் நட்சத்திரத்தில் குரு பிரவேசிக்கிறார்..! 5 ராசிகளுக்குப் பொற்காலம் தொடங்குகிறது..!



