சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜபிரியா என்பவர், தனது பணித்தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
ராஜபிரியா, அரசு உதவி பெறும் ஒரு தனியார் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர் (ASO) பணிக்கு விண்ணப்பித்துள்ளார்.
தேர்வுகளை வெற்றிகரமாக முடித்ததன் பின்னர், அவர் நீர்வளத் துறையில் பணியில் சேர்க்கப்பட்டு, தலைமைச் செயலகப் பயிற்சிக்கும் அனுப்பப்பட்டார். ஆனால், பின்னர் “தமிழ்நாடு தலைமைச் செயலக பணி விதிகளின்படி தேர்வு நடைபெறவில்லை” என்ற காரணத்தை முன்வைத்து, அவரது தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டதாக உத்தரவிடப்பட்டது.
மேலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்கள் தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர்களாகக் கருதப்பட முடியாது என்பதால், அவரின் தேர்வு ரத்து செய்யப்படுவதாக TNPSC சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து, தனது தேர்வை ரத்து செய்த உத்தரவை ரத்து செய்து, தன்னை நீர்வளத் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியில் தொடரச் செய்து, அனைத்து சம்பள மற்றும் பணப் பலன்களையும் வழங்க உத்தரவிட வேண்டும் என ராஜபிரியா நீதிமன்றத்தை அணுகினார்.
இந்த வழக்கை நீதிபதி கே.குமரேஷ்பாபு விசாரித்தார். TNPSC சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “மனுதாரர் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி பணியாளர். அவரை தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர் எனக் கருத முடியாது. தலைமைச் செயலக பணிக்கு தமிழ்நாடு அமைச்சுப் பணிவிதிகள் அல்லது தமிழ்நாடு ஜூடிசியல் பணி விதிகளின் கீழ் வருபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்” என்று வாதிட்டார்.
இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனது உத்தரவில் TNPSC வெளியிட்ட அறிவிப்பாணையில் குறைபாடு உள்ளது. அந்தக் குறைபாட்டினால் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மனுதாரர் மீது எந்த தவறும் இல்லை என்று தெரிவித்தார்.
அதே நேரத்தில், மனுதாரர் உதவி பிரிவு அலுவலர் பணிக்கான பொது தகுதிகளை பெற்றிருந்தாலும், தலைமைச் செயலக பணி விதிகளை பூர்த்தி செய்யாததால், அவரை அந்தப் பணியில் தொடர உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி கூறினார். இந்த நிலையில், நீதிமன்றத்தால் அனுதாபம் மட்டுமே தெரிவிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
எனினும், உதவி பிரிவு அலுவலர் பணிக்காக, கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட தனது இளநிலை உதவியாளர் பணியை மனுதாரர் துறந்துள்ளதைக் கருத்தில் கொண்டு, TNPSC, ராஜபிரியாவுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், எதிர்காலத்தில் இத்தகைய தவறான அறிவிப்பாணைகள் வெளியிடக் கூடாது என்று TNPSC-க்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



