உலகம் முழுவதும் பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று பல தளங்களில் பேச்சுகள் நடந்தாலும், நடைமுறை வாழ்க்கையில் பெண்கள் இன்னும் ஆணாதிக்கத்திற்கும், சமத்துவமின்மைக்கும் எதிராக போராடி வருகின்றனர். இந்தியாவைத் தவிர பல நாடுகளிலும் இதே நிலை நீடிக்கிறது. ஆனால், இந்த சூழ்நிலைக்கே முற்றுப்புள்ளி வைக்கப் போல், உலகில் பெண்கள் மட்டுமே வாழ்ந்து, ஆட்சி செய்யும் ஒரு கிராமம் உள்ளது.
அது வடக்கு கென்யாவின் சம்பூர் கவுண்டியில் உள்ள உமோஜா கிராமம். இங்கு பெண்களே மட்டுமே வசிக்கின்றனர்; ஆண்கள் நுழைவு முற்றிலும் தடை. கிராமத்தின் தோற்றம் பழங்குடி குடியிருப்புகளைப் போன்றே இருந்தாலும், அதனை வித்தியாசப்படுத்துவது இங்கு பெண்களே சமூகத்தின் தலைவர்கள்.
இந்த கிராமத்தில் வசிக்கும் பெண்கள் பெரும்பாலும் பாலியல் வன்முறை, துஷ்பிரயோகம், குழந்தை திருமணம் அல்லது பெண் விருத்தசேதனம் போன்ற கொடுமைகளில் சிக்கி, குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவர்கள். தங்களது உரிமைகளையும், உயிரையும் காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள் உமோஜாவை அடைகிறார்கள். தற்போது சுமார் 50 குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன.
பெண்களின் உரிமைகள், பாலின அடிப்படையிலான வன்முறைகளை எதிர்க்கும் கல்வி மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இக்கிராமத்தில் வலியுறுத்தப்படுகின்றன. இங்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் 18 வயது வரை தங்கலாம். பின்னர், அவர்கள் வேறு இடங்களில் சென்று வாழ வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பாகவும், சுதந்திரமாகவும் வாழ்வதற்காக உலகம் முழுவதும் பாடுபடும் நிலையில், உமோஜா கிராமம் பாலின சமத்துவம் எப்படிப்பட்ட தியாகங்களின் மூலம் உருவாகிறது என்பதை நினைவூட்டுகிறது. அதேசமயம் பெண்கள் சுதந்திரமாக வாழ ஆண்களைத் தவிர்க்க வேண்டிய நிலை ஏன் ஏற்பட வேண்டும்? என்ற ஒரு கேள்வியையும் எழுப்புகிறது.
Read more: தினமும் பழங்கள் மட்டுமே சாப்பிட்டால்.. இதுதான் நடக்கும்! நிபுணர்கள் வார்னிங்..!