உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் தௌராலா பகுதியிலுள்ள கிராமங்களில் ‘நிர்வாண கும்பல்’ என அழைக்கப்படும் மர்ம கும்பலின் அட்டூழியம், கிராம மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. வயல்வெளிகளில் இருந்து நிர்வாணமாக வெளிப்படும் இந்த கும்பல், தனியாக செல்லும் பெண்களை வலுக்கட்டாயமாக தாக்கி பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், வன்கொடுமை செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சமீபத்தில், இந்தப் பகுதியில் 4 சம்பவங்கள் இதேபோன்று அரங்கேறியுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, பாராலா கிராமத்தில் வேலைக்கு சென்ற ஒரு பெண்ணை 2 பேர் தாக்கியபோது, அவர் சத்தம் போட்டதால் அங்கிருந்து தப்பித்துள்ளார். இந்த சம்பவத்தால், பெண்கள் தனியாக வெளியே வர அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாக கிராமத் தலைவர் ராஜேந்திர குமார் தெரிவித்துள்ளார்.
கிராம மக்களின் அச்சத்தை போக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும், கிராமங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு, டிரோன்கள் உதவியுடன் குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.