தமிழ்நாடு அரசின் கனவுத் திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம் (KMUT) தற்போது இரண்டாம் கட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே 1.13 கோடி பெண்கள் பயனாளிகளாக உள்ள இந்தத் திட்டத்தில், கூடுதலாக 17 லட்சம் பெண்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இத்திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத்தொகை திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பதாக தெரிவித்தார். மேலும், திராவிட மாடல் ஆட்சி பெண்களின் நலனுக்காக இன்னும் பல திட்டங்களைச் செயல்படுத்தும் என்றும், இந்த மகளிர் உரிமைத்தொகை விரைவில் உயர்த்தப்படும் என்றும் அவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
தொடர்ந்து, தருமபுரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், இப்போது விடுபட்டுள்ள தகுதியுள்ள பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்பளிக்கப்படும் என்று உறுதி அளித்தார். விண்ணப்பித்து, அனைத்துத் தகுதிகளும் இருந்தும் ஏதேனும் காரணங்களால் நிராகரிக்கப்பட்டிருந்தால், அவர்கள் மேல்முறையீடு செய்தால், அத்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள் எங்கு மேல்முறையீடு செய்வது என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு ஏற்கனவே அமைச்சர்கள் சக்கரபாணி மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளனர்.
எனவே, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பெண்கள், முதலில் தங்கள் விண்ணப்பம் என்ன காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டுள்ளது என்பதைத் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும். நிராகரிப்புக்கான காரணம் சரியானதாக இல்லை என்று கருதினால், அருகிலுள்ள அரசு அலுவலகங்களுக்குச் சென்று மேல்முறையீடு செய்வது குறித்த விளக்கங்களைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
நிராகரிப்புக்கான காரணம் சரியாக இருந்தால், மேல்முறையீடு செய்தாலும் விண்ணப்பம் ஏற்கப்படாது என்பதால், அரசின் அதிகாரபூர்வமான தகவல்களைத் தெரிந்துகொண்டு பெண்கள் அதற்கேற்றவாறு செயல்படுவது அவசியம். இத்திட்டம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை அரசு விரைவில் வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



