பொதுவாக, பாலுணர்வுப் பொருட்கள் (Sex Toys) இளையவர்களுடன் மட்டுமே தொடர்புடையவை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், சமீபத்திய சர்வதேச ஆய்வு ஒன்று இதை மாற்றியுள்ளது. ‘மெனோபாஸ்’ என்ற மருத்துவ இதழில் வெளியான ஓர் ஆய்வு, 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மத்தியில் பாலுணர்வுப் பொருட்களின் பயன்பாடு முன்பை விட அதிகமாக உள்ளது என்று கூறுகிறது.
அமெரிக்காவில் 3,000-க்கும் அதிகமான 60 வயதுப் பெண்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, தனியாக பாலுணர்வைத் தூண்டிக் கொள்வது மற்றும் பாலுணர்வுப் பொருட்களைப் பயன்படுத்துவது ஆகியவை பலருக்கும் தெரிந்திருப்பதை விட, மிகவும் சகஜமாகவும், நன்மை தருவதாகவும் உள்ளன.
மூத்த பெண்களிடம் இந்த மாற்றம் ஏற்படப் பல காரணங்கள் உள்ளன. விவாகரத்து, துணையை இழத்தல் அல்லது தனித்து வாழும் விருப்பம் போன்ற காரணங்களால், பல பெண்கள் தனியாக வாழ்கின்றனர். இதனால், தங்கள் இன்பத்தை தாங்களே தீர்மானிக்கும் சுதந்திரம் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
மெனோபாஸுக்குப் பிறகு ஏற்படும் வறட்சி மற்றும் ஹார்மோன் மாற்றங்களால், வழக்கமான பாலியல் உறவு வலி நிறைந்ததாக மாறலாம். மேலும், வயதான ஆண்களுக்கு விறைப்புத்தன்மையில் சிரமங்கள் ஏற்படுவதால், பெண்கள் வெளிப்புற தூண்டுதலுக்காக வைபிரேட்டர்கள் போன்ற மாற்றுப் பொருட்களை நாடுகின்றனர்.
இப்போது பாலுணர்வுப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், மெனோபாஸ் அடைந்த பெண்களுக்காகவும் பிரத்யேகமாகப் பொருட்களைத் தயாரிக்கத் தொடங்கியுள்ளன. இதனால் இந்தச் சமூக தடையும் குறைகிறது. இதுதொடர்பான ஆய்வில் பங்கேற்ற பெண்கள், துணையுடன் இருக்கும்போது பயன்படுத்தியதை விட, தனியாக இருக்கும்போது இந்தப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இந்தப் பொருட்களைப் பயன்படுத்திய பெண்களுக்கு உச்சநிலை இன்பம் அடைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. இந்த ஆய்வில் கிடைத்த ஓர் ஆச்சரியமூட்டும் தகவல் என்னவென்றால், மூத்த வயதில் பாலுணர்வைத் தூண்டிக்கொள்வது, நினைவாற்றல் மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவக்கூடும் என்பதற்குத் தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்துள்ளன. எனவே, 60 வயதிற்குப் பிந்தைய பாலியல் ஆரோக்கியத்தை மௌனமாக இருட்டடிப்பு செய்யாமல், அதுபற்றி சகஜமாகப் பேசுவதன் மூலம், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தலாம் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.



