திருநெல்வேலி மாநகரப் பகுதியில் பெண்களின் ஆடைகள் தொடர்ந்து மாயமாகி வந்த நிலையில், அவற்றை திருடி வீட்டில் மூட்டைகளாகச் சேமித்து வைத்திருந்த நபர் போலீசாரிடம் சிக்கியுள்ளார். அவரது வீட்டில் இருந்து நான்கு மூட்டைகளில் பெண்களின் ஆடைகள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாநகரின் பல பகுதிகளில் வீடுகள் மற்றும் மகளிர் தங்கும் விடுதிகளின் காம்பவுண்ட் சுவர்களில் காய வைக்கப்பட்டிருந்த பெண்களின் ஆடைகள் இரவு நேரங்களில் தொடர்ந்து காணாமல் போயுள்ளன. முதலில் ஒன்றிரண்டு இடங்களில் மட்டும் நடந்த சம்பவமாக கருதப்பட்ட நிலையில், அடுத்தடுத்து ஆடைகள் மாயமானதால் விடுதி நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் சந்தேகமடைந்தனர்.
இதையடுத்து பாளையங்கோட்டை என்.ஜி.ஓ ‘பி’ காலனியைச் சேர்ந்த வள்ளி செல்வம் என்பவருக்குச் சொந்தமான பெருமாள்புரம் ‘சி’ காலனி மகளிர் விடுதியிலும் ஆடைகள் காணாமல் போனதைத் தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர்.
அதில் அதிகாலை 4 மணியளவில் மர்ம நபர் ஒருவர் முகத்தை மறைக்காமல் விடுதியின் காம்பவுண்ட் சுவரை ஏறி உள்ளே நுழையும் காட்சி பதிவாகியிருந்தது. பின்னர் அங்கு கொடிகளில் காய வைக்கப்பட்டிருந்த பெண்களின் ஆடைகளை ஒன்றாகச் சேகரித்த அவர், அவற்றை மூட்டையாகக் கட்டியுள்ளார். தொடர்ந்து அந்த மூட்டையை எடுத்துக்கொண்டு சுவரைத் தாண்டி வெளியேறி, இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து சென்ற காட்சியும் சிசிடிவியில் பதிவாகியிருந்தது.
இந்த காட்சிகள் போலீசாரின் விசாரணைக்கு முக்கிய தடயமாக அமைந்தன. இதையடுத்து விடுதி உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சிசிடிவி காட்சிகள், நபரின் உடல் அடையாளங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய இருசக்கர வாகனம் உள்ளிட்ட தகவல்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த தமீமுன் அன்சாரி என்பவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
பகல் நேரங்களில் மீன் கடையில் வேலை செய்து வந்த தமீமுன் அன்சாரி, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் பெண்களின் ஆடைகளை திருடி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. குறிப்பாக வீடுகள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதிகளின் வெளிப்புறங்களில் காய வைக்கப்பட்டிருந்த ஆடைகளை குறிவைத்து அவர் திருடியுள்ளார்.
இதையடுத்து அவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நான்கு பெரிய மூட்டைகளில் பெண்களின் ஆடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவை எந்தெந்த இடங்களில் திருடப்பட்டவை என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ச்சியாக பெண்களின் ஆடைகளை திருடி அவற்றை வீட்டில் சேகரித்து வந்ததற்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரது செயல்பாடுகள் தொடர்பாக வேறு புகார்கள் உள்ளனவா, இதேபோல் மேலும் பல இடங்களில் ஆடைகள் காணாமல் போன சம்பவங்களுடன் அவருக்கு தொடர்பு உள்ளதா என்பதையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணைக்குப் பின்னர் தமீமுன் அன்சாரியை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
Also Read: தமிழகத்தில் வேகமெடுக்கும் டெங்கு.. ஒரே நாளில் 228 பேருக்கு பாதிப்பு; சென்னையில் மட்டும் 79 பேர்!



