டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிறுவனம் வழக்குப்பதிவு செய்துள்ளது.
முன்னதாக சில மாதங்களுக்கு முன் ரூ.34 ஆயிரம் கோடிக்கு ட்விட்டரின் பங்குகளை வாங்க எலான் மஸ்க் ஒப்பந்தம் போட்டிருந்தார். பின்னர், குறுகிய கால இடைவெளிக்குப் பின் ட்விட்டரில் போலி கணக்குகள் குறித்த தகவல்களை அளிக்க தவறியதால், ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் அறிவித்திருந்தார். இதனையடுத்து, அவருக்கு எதிராக வழக்கு தொடர ட்விட்டர் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவில் உள்ள டெலாவேர் நீதிமன்றத்தில் எலான் மஸ்க் மீது ட்விட்டர் நிர்வாகம் வழக்கு தொடுத்துள்ளது. அதில், ஒப்பந்தத்தில் அளித்த உறுதிமொழியை எலான் மஸ்க் நிறைவேற்ற உத்தரவிடுமாறு கூறப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரம் இதுகுறித்து ட்விட்டர் நிர்வாகம் தரப்பில், “முன்னதாக போடப்பட்ட ஒப்பந்த விதிமுறைகளின்படி ஒப்பந்தத்தை முடிக்கவில்லை என்றால், எலான் மஸ்க் ஒரு பில்லியன் டாலரை முறிவு (break-up) கட்டணமாக செலுத்த வேண்டும். இதை முன்னிறுத்தி ஒப்பந்தத்தை அமல்படுத்த சட்ட நடவடிக்கையைத் தொடர திட்டமிட்டுள்ளோம். இந்த சட்டப் போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று கூறியிருந்தது.