அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை ’இயன்’ புயல் கடுமையாக தாக்கியிருக்கிறது. கடந்த வெள்ளியன்று புயல் கரையை கடந்தாலும் அது ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியதாகவே இருந்திருக்கிறது.
ஃப்ளோரிடாவில் ஏற்பட்ட இந்த ’இயன்’ புயல் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஏனெனில், இயன் புயல் முன்னெப்போதும் இல்லாத வகையில் வலுவடைந்ததால், ஃப்ளோரிடாவில் உள்ள வீடுகள், சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளித்ததோடு, வாகனங்கள் பலவும் கடுமையான சேதத்தை சந்தித்திருந்தன. இதுபோக கடல்பசுக்கள், பெரிய பெரிய மீன்கள் போன்ற கடல் உயிரினங்கள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதனையடுத்து, அமெரிக்க செய்தி நிறுவனங்கள் அனைத்தும் மாறி மாறி புயல் பாதிப்புகள் குறித்த செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன.
இப்படி இருக்கையில், NBC செய்தியின் கைலா கேலர் என்ற பெண் பத்திரிகையாளர் ஒருவர் செய்தி சேகரிப்பு முறைதான் தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. புயல் பாதித்த பகுதிகள் பற்றி செய்திக்காக பேசிக் கொண்டிருந்த கைலா, இயன் புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்தும் பதிவு செய்துக் கொண்டிருந்தார். அப்போது, அவர் வைத்திருந்த மைக்கில் மழை நீர் சேர்ந்துவிடக் கூடாது என்பதற்காக அதன் மீது ஆணுறையால் போட்டு கவர் செய்திருக்கிறார். இதைக் கண்ட பலரும் வியந்து போயிருக்கிறார்கள். இது குறித்து பேசியுள்ள கைலா, “என்னுடைய மைக்கில் என்ன இருக்கிறது என பலர் என்னிடம் கேட்கிறார்கள். நீங்கள் நினைப்பது சரிதான். ஆணுறையால்தான் மைக்கை மூடியிருந்தேன். இங்கு நிறைய மழை பெய்கிறது, மைக்ரோஃபோனில் தண்ணீர் வந்தால் அது சேதமடையும், என்னால் புகாரளிக்க முடியாது. எனவே நான் இதைச் செய்ய வேண்டியிருந்தது.” எனக் கூறியிருக்கிறார்.