பொதுவாகவே அனைத்து நிறுவனங்களில் ரெஸ்யூம் (Resume) அடிப்படையில் தான் நேர்காணலுக்கு அழைப்பார்கள். அதனால் பலரும் தங்களது Resume-ஐ வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த வகையில் ஒரு பெண், தான் யார் என்பதை நிறுவனத்திற்குத் தெரியப்படுத்துவதற்காக கேக்கில் Resume-ஐ தயார் செய்து அனுப்பியிருக்கிறார்.
அமெரிக்காவின் வடக்கு கரோலினாவைச் சேர்ந்தவர் கார்லி பாவ்லினாக் பிளாக்பர்ன் (Karly Pavlinac Blackburn). இந்த பெண் நைக் நிறுவனத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது Resume-ஐ அந்நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளார். ஆனால், அவர் பலமுறை முயற்சித்தும் அவருக்கு அங்கு வேலை கிடைக்கவில்லை. இந்நிலையில், அந்த பெண் எப்படியாவது நைக் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காக வித்தியாசமான முறையை கையாண்டுள்ளார்.
அவரின் தோழி கொடுத்த யோசனை படி, ஓரிகானில் உள்ள பீவர்டனில் உள்ள நைக் நிறுவனத்தில் நிகழ்ச்சி நடைபெறும் சமயத்தில் அந்த பெண் ஒரு கேக்கை வாங்கி அதில் தனது தகவல்களை எழுதி ரெஸ்யூமாகத் தயார் செய்து அந்நிறுவனத்திற்கு விண்ணப்பித்துள்ளார். மேலும், வழக்கத்திற்கு மாறாக கேக் மூலம் தனது ரெஸ்யூம்மை அனுப்பியதற்கான காரணத்தை அந்த பெண் LinkedIn-ல் பதிவிட்டுள்ளார்.
அதில் “சில வாரங்களுக்கு முன்பு நான் நைக்கிற்கு கேக் மூலம் தனது ரெஸ்யூம்மை அனுப்பினேன். காரணம், அந்நிறுவனம் தற்போது யாருக்கும் வேலை வாய்ப்பு வழங்க தயாராக இல்லை. ஆனால், நான் யார் என்பதை அந்த நிறுவனத்திடம் தெரியப்படுத்துவதற்காகத்தான் கேக்கில் ரெஸ்யூமை தயார் செய்து அனுப்பினேன்” என்று பதிவிட்டிருக்கிறார். இந்த பெண்ணின் ரெஸ்யூம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது.