இன்றைய டிஜிட்டல் யுகத்தில், காய்கறி வாங்குவது முதல் அரசுத் துறைகளில் பத்திரப் பதிவு செய்வது வரை அனைத்தும் விரல் நுனியில் வந்துவிட்டன. அந்த வரிசையில், வங்கிக் கிளைகளுக்கு நேரில் சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து கணக்கை மூடும் பழைய நடைமுறைக்கும் இப்போது விடை கொடுக்கப்பட்டு வருகிறது. தேவையற்ற வங்கிக் கணக்குகளை வீட்டிலிருந்தே ஆன்லைன் மூலம் ரத்து செய்யும் வசதியை முன்னணி வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. இருப்பினும், போதிய வழிகாட்டுதல் இல்லாததால் இன்றும் பலர் வங்கி வாசலில் தவம் கிடப்பதை காண முடிகிறது.
பொதுவாக வேலை மாற்றம் அல்லது சலுகைகளுக்காகப் பல வங்கிகளில் கணக்குத் தொடங்கும் நாம், காலப்போக்கில் சில கணக்குகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து விடுகிறோம். இத்தகைய செயலற்ற கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையைப் பராமரிக்க தவறினால், அபராதம் விதிக்கப்படுவதுடன், ஏடிஎம் மற்றும் காசோலை புத்தகங்களுக்கான மறைமுகக் கட்டணங்கள் உங்கள் சேமிப்பைக் கரைத்துவிடும். எனவே, பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை முறையாக மூடுவதே புத்திசாலித்தனம். ஆனால், கணக்கை மூடுவதற்கு முன் சில முக்கியமான முன்னேற்பாடுகளைச் செய்வது அவசியம்.
முதலாவதாக, உங்கள் கணக்கில் உள்ள மீதமுள்ள தொகையை வேறு கணக்கிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். கடந்த 2 முதல் 3 ஆண்டுகால வங்கிப் பரிவர்த்தனை அறிக்கையை (Statement) பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வது வருமான வரித் தாக்கல் செய்யும்போது உதவும். மேலும், நிலுவையில் உள்ள சேவை கட்டணங்கள் அல்லது மாதத் தவணைகள் (EMI) ஏதேனும் இருந்தால் அவற்றை முழுமையாகச் செலுத்திவிட வேண்டும். குறிப்பாக, நெட்பிளிக்ஸ் அல்லது இன்சூரன்ஸ் போன்ற சேவைகளுக்கு ‘ஆட்டோ டெபிட்’ (Auto-debit) வசதி செய்திருந்தால், அதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். கணக்குத் தொடங்கி ஓராண்டு முடிவதற்குள் அதை மூடினால், வங்கிகள் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாக வசூலிக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
ஆன்லைனில் கணக்கை மூடும் நடைமுறை மிகவும் எளிதானது. வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது மொபைல் செயலியில் உள்நுழைந்து, ‘சேவைக் கோரிக்கைகள்’ (Service Requests) பகுதியில் ‘கணக்கை மூடுதல்’ (Close Bank Account) என்ற விருப்பத்தைத் தேர்வு செய்ய வேண்டும். அங்கு உரிய காரணத்தைக் குறிப்பிட்டு, அடையாளச் சான்றுகளைப் பதிவேற்றி, ஓடிபி (OTP) மூலம் உறுதிப்படுத்தினால் உங்கள் விண்ணப்பம் ஏற்கப்படும். ஒரு சில நாட்களில் கணக்கு முழுமையாக முடக்கப்படும். இருப்பினும், சில பாதுகாப்பு காரணங்களுக்காகப் பயன்படுத்தப்படாத ஏடிஎம் கார்டு மற்றும் காசோலை புத்தகத்தை நேரில் ஒப்படைக்க வங்கி நிர்வாகம் உங்களை அழைக்க வாய்ப்புள்ளது.
கணக்கு மூடப்பட்டதற்கான உறுதிப்படுத்தல் குறுந்தகவல் வந்த பிறகு, கையில் உள்ள டெபிட் கார்டை சிதைத்து அப்புறப்படுத்துவது பாதுகாப்பானது. இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவதால், கணக்கை மூடிய பிறகும் சில நாட்களுக்கு அந்த எண்ணில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகள் நடக்கிறதா என்பதை ஒருமுறை சரிபார்ப்பது நல்லது.



