துணிகளை துவைத்த பிறகு நாம் பயன்படுத்தும் டிடர்ஜென்ட்கள் மற்றும் கிளீனர்கள் முழுமையாக பாதுகாப்பானவை என்று பெரும்பாலானோர் நினைக்கிறோம். ஆனால் உண்மையில், அவற்றில் மறைந்திருக்கும் சில வேதிப்பொருட்கள் மெதுவாக உடல்நலத்தை பாதித்து, ஹார்மோன் சமநிலையை குலைத்து, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று பிரபல புற்றுநோய் மருத்துவர் டாக்டர் தரங் கிருஷ்ணா எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “உங்கள் துணி துவைக்கும் செயல்முறையில் நறுமணத்துடன் சேர்ந்து, நீங்கள் கவனிக்காத பல விஷயங்களும் இருக்கலாம். நாம் தினமும் பயன்படுத்தும் டிடர்ஜென்ட்களில் பெரும்பாலானோர் அறியாத மறைமுக ஆபத்துகள் உள்ளன,” என்று குறிப்பிட்டுள்ளார்..
மேலும் “நீங்கள் தினசரி பயன்படுத்தும் டிடர்ஜென்ட்கள் மற்றும் கிளீனர்கள் புற்றுநோய் உள்ளிட்ட தீவிர உடல்நல ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும். நமது உடைகளையும் வீடுகளையும் சுத்தமாக வைத்திருக்க உதவுவதாக நம்பும் பல பொருட்கள், உண்மையில் உடலுக்குள் மெதுவாக விஷமாக செயல்படும் வேதிப்பொருட்களை கொண்டுள்ளன,” என்று அவர் எச்சரித்தார்.
டிடர்ஜென்ட்களில் வரும் ‘புதிய நறுமணம்’ பெரும்பாலும் ப்தாலேட்ஸ் (Phthalates) எனப்படும் வேதிப்பொருட்களை மறைக்க பயன்படுத்தப்படுகிறது. இவை காலப்போக்கில் உடலின் ஹார்மோன் சமநிலையை பாதிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், “சில டிடர்ஜென்ட்களில் ஃபார்மால்டிஹைடு (Formaldehyde) மற்றும் பென்சீன் (Benzene) போன்ற பொருட்களும் இருக்கக்கூடும். இவை சுவாச மண்டலத்தை எரிச்சலடையச் செய்து, பிராங்கைட்டிஸ் போன்ற பிரச்சினைகளை உருவாக்கி, புற்றுநோய் அபாயத்தை கணிசமாக உயர்த்தும்,” என்றும் அவர் கூறினார்.
பொதுவாக பயன்படுத்தப்படும் பல லாண்ட்ரி பொருட்களில் காணப்படும் சில சேர்மங்கள் மிகுந்த கவலைக்குரியவை என்றும், அவை நீண்ட காலத்தில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடும் என்றும் மருத்துவர் எச்சரித்துள்ளார்.
அன்றாடமாக பயன்படுத்தப்படும் பல டிடர்ஜென்ட்கள் மற்றும் கிளீனர்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சில வேதிப்பொருட்கள் மறைந்திருக்கின்றன. அவை பெயர்ப்பலகைகளில் தெளிவாக குறிப்பிடப்படாமல் இருப்பதே பெரிய ஆபத்தாகும்.
ப்தாலேட்ஸ் (Phthalates):
இவை பெரும்பாலும் ‘fragrance’ (நறுமணம்) என்ற பெயரில் மறைக்கப்படுகின்றன. வணிக ரகசியச் சட்டங்களால், தனிப்பட்ட வேதிப்பொருட்களின் பெயர்கள் வெளிப்படையாக குறிப்பிடப்படுவதில்லை. ப்தாலேட்ஸ் உடலின் ஹார்மோன் செயல்பாட்டை பாதிக்கும் எண்டோக்ரைன் டிஸ்ரப்டர்கள் ஆகும். இதனால் மார்பகப் புற்றுநோய் உள்ளிட்ட ஹார்மோன் தொடர்புடைய புற்றுநோய்களின் அபாயம் அதிகரிக்கலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
1,4-டைஆக்சேன் (1,4-Dioxane):
சில சவர்க்காரம் மற்றும் சர்ஃபாக்டன்ட்கள் தயாரிக்கும் போது உருவாகும் துணை உற்பத்திப் பொருளே இது. இது நோக்கமிட்டு சேர்க்கப்படும் வேதிப்பொருள் அல்ல என்பதால், பெரும்பாலும் லேபிள்களில் குறிப்பிடப்படுவதில்லை. அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (EPA) இதனை “மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தக்கூடியது” எனக் கருதப்படும் பொருளாக பட்டியலிட்டுள்ளது.
ஃபார்மால்டிஹைடு (Formaldehyde):
பாதுகாப்புப் பொருளாகவும் (preservative), பாக்டீரியா எதிர்ப்பு முகவராகவும் பயன்படுத்தப்படும் இது, சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் (IARC) மூலம் மனிதர்களுக்கு உறுதியாக புற்றுநோய் உண்டாக்கும் பொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது திரவம் மற்றும் பொடி வடிவ டிடர்ஜென்ட்களிலும் காணப்படலாம்.
பென்சீன் (Benzene):
இது சுவாச மண்டலத்தை எரிச்சலடையச் செய்யும் தன்மை கொண்டது. IARC அமைப்பு இதனை Group 1 carcinogen என வகைப்படுத்தியுள்ளது. பொதுவாக தொழில்சாலை சூழலில் அதிகம் தொடர்பு ஏற்படும் இந்த வேதிப்பொருள், சில தயாரிப்புகளில் மிகச் சிறிய அளவிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
என்ன மாற்றங்களை செய்யலாம்?
20 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் கொண்ட புற்றுநோய் மருத்துவர் டாக்டர் தரங் கிருஷ்ணா, பாதுகாப்பான மாற்றுகளை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை வழங்குகிறார். “இந்த அமைதியாக செயல்படும் வேதிப்பொருட்கள், நீங்கள் நினைப்பதைவிட உங்கள் வீட்டை அதிகமாக பாதிக்கக்கூடும். அடுத்த முறை துணி துவைப்பதற்கு முன் இதை கவனியுங்கள். சிறிய மாற்றங்களே பெரிய பாதுகாப்பை தரும்,” என்று அவர் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.
அவர் பரிந்துரைக்கும் பாதுகாப்பான வழிகள்:
மூலிகை அடிப்படையிலான (Herbal) கிளீனர்கள் பயன்படுத்துதல்
வெறும் தண்ணீருடன் பயன்படுத்தக்கூடிய இயற்கை சுத்திகரிப்பு பொருட்களை தேர்வு செய்தல்
குடும்பத்தினரை தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருட்களிலிருந்து பாதுகாத்தல்
“உங்கள் வீட்டுக்குள் கொண்டு வரும் பொருட்கள் குறித்து விழிப்புடன் இருங்கள். உங்கள் உடல்நலம் மற்றும் உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை முதன்மையாக கருதுங்கள்,” என்று டாக்டர் கிருஷ்ணா அறிவுறுத்தி உள்ளார்.



