தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அனல்மின் நிலைய கட்டுமானப் பணியில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜூன் பிரசாத் யாதவ் (58) கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5-ஆம் தேதி இரவு, குலசேகரன்பட்டினம்-உடன்குடி சாலையில் உள்ள தருவைகுளம் மதுபானக் கடையில் மது அருந்திக்கொண்டிருந்த அர்ஜூன் பிரசாத் யாதவ், மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது.
இச்சம்பவம் குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டதில், இந்தச் சம்பவத்தில் அதே ஊரை சேர்ந்த முத்துசெல்வன் (27) மற்றும் நாசரேத் வெள்ளரிக்கா ஊரணியைச் சேர்ந்த மூர்த்திராஜா (27) ஆகியோர் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், தலைமறைவாக இருந்த அவர்கள் இருவரையும் போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர்.
போலீசாரிடம் இருவரும் அளித்த வாக்குமூலத்தில், “நாங்கள் இருவரும் மதுபானக்கடையில் மது அருந்தும்போது, அங்கு வந்த அர்ஜூன் பிரசாத் யாதவுக்கும் எங்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் அவரது கழுத்தில் காலால் மிதித்து கொலை செய்தோம். பின்னர், சடலத்தை கடைக்குப் பின் பகுதிக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு தப்பிச் சென்றோம்” என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, கொலை செய்யப்பட்ட அர்ஜூன் பிரசாத் யாதவ்வின் உடல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், அவரது உறவினர்கள் உடலைப் பெற்றுக்கொள்ள மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி நகர ஏ.எஸ்.பி. மதன், திருச்செந்தூர் டி.எஸ்.பி. மகேஷ்குமார் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கொலையான தொழிலாளியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் வலியுறுத்தினர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில், அர்ஜூன் பிரசாத் யாதவ்வின் குடும்பத்திற்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் இழப்பீட்டுத் தொகையை வழங்கியது. இதனைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.