சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஜோஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation) மீண்டும் தொழில்நுட்ப உலகில் தனது ஆற்றலை நிரூபித்துள்ளது. வாட்ஸ்அப்புக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ‘அரட்டை (Arattai)’ செயலியால் சமூக ஊடக உலகில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஜோஹோ, இப்போது அதன் புதிய வெப் பிரவுசர் ‘உலா (Ulaa)’வின் மூலம் உலகளவில் புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
ஜோஹோவின் ‘உலா’ பிரவுசர் தற்போது ஆப் ஸ்டோரில் முதல் இடத்தை பிடித்து சிறப்பான சாதனையைப் படைத்துள்ளது. இது கூகுள் குரோம் மற்றும் ஆப்பிள் சஃபாரிக்கு நேரடி போட்டியாக கருதப்படுகிறது. தனியுரிமை மற்றும் தரவு பாதுகாப்பு அம்சங்களுக்காக ‘உலா’ பிரவுசர் பயனர்களிடையே வேகமாக பிரபலமடைந்து வருகிறது.
ஜோஹோ நிறுவனம் கூறுகையில்: “உலா பிரவுசர், பயனர்களின் தரவுகளை சேகரிக்கவோ, சேமிக்கவோ அல்லது விற்பனை செய்யவோ இல்லை. கூகுள் போன்ற நிறுவனங்கள் போல விளம்பரத்திற்காக தரவுகளைப் பயன்படுத்துவதும் இல்லை.” என்றது. இதன் மூலம், பயனர்களின் ஆன்லைன் செயல்பாடுகள் விளம்பர கண்காணிப்பிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன.
குழந்தைகள் மற்றும் தொழில்முறை பயனர்களுக்கான அம்சங்கள்:
- குழந்தைகளுக்கான பாதுகாப்பான பிரவுசிங் சூழல்.
- டெவலப்பர்கள் மற்றும் சோதனையாளர்களுக்கான பிரத்யேக வசதிகள்.
- Ad Blockers மற்றும் Tracker Protection முன்பிருந்தே இணைக்கப்பட்டுள்ளன.
இதனால், ‘உலா’ பிரவுசர் மிகுந்த பாதுகாப்பான இணைய அனுபவத்தை வழங்குகிறது. - ‘உலா’ தற்போது Android, iOS, Windows, macOS மற்றும் Linux ஆகிய அனைத்து முக்கிய இயங்குதளங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக உள்ளது.



