உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு 100% கடன் உத்தரவாத காப்பீட்டை வழங்குவதற்காக, ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தை அறிமுகப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் (எம்எஸ்எம்இ) உட்பட தகுதியான ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.20,000 கோடி வரை கூடுதல் கடன் வசதிகளை வழங்க முடியும்.
செயல்படுத்தல் உத்தி மற்றும் இலக்குகள்:குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட தகுதியான ஏற்றுமதியாளர்களுக்கு உறுப்பினர் கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் கூடுதல் கடன் ஆதரவை வழங்குவதற்காக, தேசிய கடன் உத்தரவாத அறங்காவலர் நிறுவனம் மூலம் நிதிச் சேவைகள் துறையால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். நிதிச் சேவைகள் துறை செயலாளரின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு மேலாண்மைக் குழு, திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் அமலாக்கத்தை மேற்பார்வையிடும்.
முக்கிய தாக்கம்:இந்தத் திட்டம் இந்திய ஏற்றுமதியாளர்களின் உலகளாவிய போட்டித்தன்மையை மேம்படுத்துவதுடன், புதிய மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் பல்வகைப்படுத்தலை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பிணையம் இல்லாத கடன் அணுகலை செயல்படுத்துவதன் மூலம், இது பணப்புழக்கத்தை வலுப்படுத்தும், சுமூகமான வணிக நடவடிக்கைகளை உறுதி செய்யும், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் ஏற்றுமதி இலக்கை அடைவதற்கான இந்தியாவின் முன்னேற்றத்தை வலுப்படுத்தும். இது தற்சார்பு இந்தியாவை நோக்கிய இந்தியாவின் பயணத்தை மேம்படுத்தும்.



