உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் நடந்த கோரமான சாலை விபத்தில் இரண்டு கனரக வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு ஓட்டுநர்கள் உயிருடன் எரிந்து பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தகவலின்படி, அசாம் சௌராஹா அருகே தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இயந்திரங்களை ஏற்றிச் சென்ற ஒரு டிசிஎம் லாரி, முன்னால் சென்ற பிக்கப் வாகனத்தை முந்த முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் வந்த சிமெண்ட் ஏற்றிச் சென்ற டிரெய்லருடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.
மோதல் ஏற்பட்ட உடனே இரண்டு வாகனங்களும் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. தீ மிக வேகமாக பரவியதால், வாகனங்களுக்குள் சிக்கிய ஓட்டுநர்கள் வெளியேற முடியாமல் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர். தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் இருவரும் உயிரிழந்துவிட்டனர்.
சம்பவ இடத்திற்கு காவல் கண்காணிப்பாளர் விஸ்வஜீத் ஸ்ரீவஸ்தவா மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. காயமடைந்த நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Read more: ஜப்பானில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு! பீதியில் மக்கள்..!



