திமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளதாக பேசிய முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு பதிலளித்த ராமதாஸ், அதில் பாமக இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. எனவே, பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கும்போது கடுமையான விதிகளைப் பின்பற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் இழப்பீடு கோரி போராடிய சிஐடியு தோழர்களை விருதுநகர் எஸ்.பி. கண்ணன் எச்சரித்துள்ளது கண்டனத்துக்குரியது. திருப்புவனத்தில் போலீஸாரால் கொல்லப்பட்ட அஜித்குமார் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக எம்எல்ஏ அருளை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை. நிறுவனர், தலைவரான எனக்கு மட்டும்தான் உள்ளது. அன்புமணி தொடர்பான கேள்வியை என்னிடம் கேட்பதை தவிர்க்க வேண்டும். அந்த அளவுக்கு மன வேதனைப்பட்டுள்ளேன். கூட்டணி தொடர்பாக திமுக, அதிமுகவுடன் கூட்டணி பாமக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்பது வதந்தியாகும். வன்னியர் சங்கம் சார்பில் பூம்புகாரில் ஆகஸ்ட் 10-ம் தேதி நடைபெறும் மகளிர் மாநாட்டில் அனைத்து கட்சிகளைச் சேர்ந்த மகளிரும் கலந்துகொள்ளலாம்.
திமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைய உள்ளதாக பேசிய முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு பதிலளித்த ராமதாஸ்; பாமக எந்த கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்பது குறித்து நிர்வாகக் குழு, செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடி முடிவெடுக்கும் என்றும் மழுப்பலாக கூறியுள்ளார்.