2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான முழு போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து இத்தொடரை நடத்துகின்றன.
மொத்தம் 14 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர், 2027 அக்டோபர் 2-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 21 வரை நடைபெறவுள்ளது. அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெறும். தொடரின் மகுடமாக விளங்கும் இறுதிப்போட்டி, தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ‘டிபி வேர்ல்ட் வாண்டரர்ஸ்’ மைதானத்தில் (DP World Wanderers Stadium) நவம்பர் 21-ஆம் தேதி நடைபெறும்.
குரூப் A-வில் இந்தியா – பாகிஸ்தான்!
உலகக்கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் கிரிக்கெட் உலகின் பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான விறுவிறுப்பான லீக் போட்டி அக்டோபர் 10-ஆம் தேதி நடைபெறுகிறது.
குரூப் ஏ அணிகள்: இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே மற்றும் தகுதிச்சுற்று அணி ஏ.
இந்திய அணியின் லீக் சுற்றுகள்:
அக்டோபர் 7: இந்தியா vs ஆஸ்திரேலியா (கேப்டவுன்)
அக்டோபர் 10: இந்தியா vs பாகிஸ்தான் (ஜோகன்னஸ்பர்க்)
அக்டோபர் 14: இந்தியா vs ஆப்கானிஸ்தான் (டிஷ்வானே)
அக்டோபர் 17: இந்தியா vs குவாலிஃபையர் A (ப்ளோம்ஃபோன்டைன்)
அக்டோபர் 24: இந்தியா vs ஜிம்பாப்வே (விக்டோரியா ஃபால்ஸ்)
குரூப் B விவரம்:
குரூப் பி பிரிவில் பலம் வாய்ந்த அணிகளான இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவுடன் இலங்கை, வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் தகுதிச்சுற்று அணி பி (Qualifier B) ஆகியவை இடம்பெற்றுள்ளன.
சூப்பர் 7 சுற்று மற்றும் இறுதிப்போட்டி நடைமுறை:
இரு குரூப்களிலும் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளும், நான்காவது இடத்தை பிடிக்கும் சிறந்த ஒரு அணியும் சேர்ந்து மொத்தம் 7 அணிகள் சூப்பர் 7 சுற்றுக்கு முன்னேறும். இந்தச் சுற்றில் அணிகள் முந்தைய புள்ளிகளை எடுத்துச் செல்ல மாட்டார்கள்.
சூப்பர் 7 சுற்று: அக்டோபர் 25 – நவம்பர் 14
முதலாவது அரையிறுதி: நவம்பர் 17 (கேப்டவுன்)
இரண்டாவது அரையிறுதி: நவம்பர் 18 (டிஷ்வானே)
இறுதிப்போட்டி: நவம்பர் 21 (ஜோகன்னஸ்பர்க்; மழை குறுக்கிட்டால் நவம்பர் 22 மாற்று நாள்/Reserve Day)
அட்டவணை வெளியீட்டின் போது பேசிய ஐசிசி தலைவர் ஜெய் ஷா, “போட்டி அட்டவணை அறிவிப்பு மற்றும் டிக்கெட் முன்பதிவு தொடக்கம் ஆகியவை கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளிக்கும். குறைந்த கட்டணத்தில் அனைவரும் உலகக்கோப்பையை நேரில் காணும் வகையில் டிக்கெட் திட்டமிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். மேலும், தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா இணைந்து உலகத்தரம் வாய்ந்த போட்டிகளை சிறப்பாக நடத்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.



