கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், இன்று சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடுமையான ஏற்ற இறக்கம் பதிவாகியுள்ளது. காலை நேரத்தில் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்த தங்கம் விலை, மாலை நேரத்தில் சற்று குறைந்ததால் நகைப்பிரியர்களுக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார மந்தநிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை முதலீட்டாளர்கள் அதிகம் தேர்வு செய்து வருவது போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதேபோல், இந்தியாவில் திருமண மற்றும் பண்டிகை சீசன் காரணமாக தங்கத்தின் தேவை அதிகரித்திருப்பதும் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று காலை சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.1,070 உயர்ந்து ரூ.15,400க்கு விற்பனையானது. இதன் காரணமாக ஒரு சவரன் தங்கம் ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலை நேரத்தில் தங்கம் விலையில் சற்று சரிவு ஏற்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.400 குறைந்து ரூ.15,000க்கு விற்பனையாகிறது.
காலை நேரத்தில் ஒரு கிலோ வெள்ளி ரூ.30 ஆயிரம் உயர்ந்த நிலையில், மாலை நேரத்தில் ரூ.10 ஆயிரம் குறைந்தது. தற்போது ஒரு கிலோ வெள்ளி ரூ.3,20,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை மாற்றங்கள் காரணமாக அடுத்த சில நாட்களிலும் தங்கம் விலையில் பெரிய மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Read more: ஆயுள் கைதியாக உள்ள கணவன் மூலம் குழந்தை பெற விரும்பிய மனைவி.. மனுவை நிராகரித்த ஹைகோர்ட்..!



