கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டத்தில் 22 வயது பெண்ணுக்கு பல்வேறு இடங்களில் பாலியல் வன்கொடுமை, மிரட்டல் மற்றும் சட்டவிரோதமாக சிறை வைத்தல் நடந்ததாக அளிக்கப்பட்ட புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இரண்டு ரயில்வே போலீசார் உட்பட 6 பேர் மீது யாதகிரி மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூருவில் குடும்பப் பிரச்சினையால் மன உளைச்சலில் இருந்த அந்தப் பெண், ரயில் மூலம் யாதகிரிக்கு சென்றுள்ளார். அதிகாலை யாதகிரி ரயில் நிலைய காத்திருப்பு அறையில் இருந்தபோது, தன்னுடன் அதே ரயிலில் பயணித்ததாக அறிமுகமான மல்லப்பா என்பவர் உதவி செய்வதாக கூறி அவரிடம் பேசியுள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக நம்பிக்கை ஏற்படுத்தி, ரயில் நிலையம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்ற மல்லப்பா, அங்கு அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அங்கு வந்த ரயில்வே போலீசார் ஷரணப்பா மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு போலீசார், பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகார் கூறுகிறது.
பின்னர் அந்தப் பெண்ணை ரயில் நிலையத்தில் விட்டுச் சென்ற மல்லப்பா, அங்கிருந்து சென்றுள்ளார். சிறிது நேரத்தில் மகேஷ் என்பவர் அவரை அணுகி, மல்லப்பா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு தன்னை அனுப்பியதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவரை புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அந்தப் பெண் கலபுரகிக்குச் சென்றுள்ளார். சுமார் ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் அவரைத் தொடர்பு கொண்ட மல்லப்பா, திருமணம் செய்து கொள்வதாக கூறி ஷஹாபூருக்கு அழைத்துச் சென்றுள்ளார். திருமண ஆவணங்களைத் தயார் செய்வதாகக் கூறி அங்குள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் பெங்களூரு செல்லும் நோக்கில் யாதகிரி ரயில் நிலையத்துக்கு வந்த அந்தப் பெண்ணை ரமேஷ், ஆகாஷ் என்ற பப்பு மற்றும் ஹர்ஷா என்ற சுதாகர் ஆகியோர் தடுத்து நிறுத்தியதாக புகார் தெரிவிக்கிறது. ஆகாஷும் ஹர்ஷாவும் அவரை காரில் அழைத்துச் சென்ற நிலையில், வழியில் ஹர்ஷா இறங்கியுள்ளார். தொடர்ந்து ஆகாஷ் அவரை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், பின்னர் பெங்களூரு திரும்புவதற்காக ரூ.2,000 கொடுத்ததாகவும் புகார் கூறுகிறது.
பெங்களூரு சென்ற பிறகும் அந்தப் பெண்ணை ஆகாஷ் தொடர்பு கொண்டுள்ளார். வேலை மற்றும் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மீண்டும் கலபுரகிக்கு வரவழைத்துள்ளார். அங்கு வந்த அவரை ஒரு அறையில் இரண்டு நாட்கள் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், போலீசார் தன்னைத் தேடுவதாகக் கூறி பின்னர் ரயில் நிலையத்தில் விட்டுச் சென்றதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஹர்ஷா அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு தங்குமிடமும் வீட்டு வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தருவதாக தெரிவித்துள்ளார். அவரை ஆலந்த் தாலுகாவில் உள்ள ஒரு கிராமத்தில் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற ஹர்ஷா, அங்கும் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் கூறுகிறது. பின்னர் ஆதார் அட்டை ஏற்பாடு செய்வதாகக் கூறி ஆலந்தில் உள்ள விடுதிக்கு அழைத்துச் சென்று மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆலந்திலிருந்து வெளியேறிய அந்தப் பெண், ஷஹாபூர் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது அவர் தொடர்ந்து அழுது கொண்டிருந்ததை கவனித்த சக பயணி ஒருவர், உடனடியாக 112 அவசர உதவி எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.
தகவல் கிடைத்ததும் அவசரகால மீட்புப் பணியாளர்கள் பேருந்தை இடைமறித்து அந்தப் பெண்ணை மீட்டனர். பின்னர் யாதகிரியில் உள்ள அரசின் ‘சக்தி சதன்’ பெண்கள் பாதுகாப்பு மையத்தில் அவர் தங்க வைக்கப்பட்டார்.
அங்கு ஆலோசனை வழங்கப்பட்ட பின்னர், தனக்கு நேர்ந்த சம்பவங்கள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்து யாதகிரி மகளிர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் மல்லு என்ற மல்லப்பா, ரயில்வே போலீஸார் ஷரணப்பா மற்றும் மற்றொரு அடையாளம் தெரியாத போலீஸார், மகேஷ், ஆகாஷ் என்ற பப்பு, ஹர்ஷா என்ற சுதாகர் ஆகிய 6 பேர் மீது பாரதிய நியாய சன்ஹிதாவின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கண்டறிந்து கைது செய்வதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Also Read: வீட்டில் இருந்து கேட்ட முனகல் சத்தம்… பாத்ரூமில் பதுங்கியிருந்த கள்ளக்காதலன்; கதவைத் திறந்து பார்த்த அக்கம் பக்கத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி!



