நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 950க்கும் அதிகமாக உள்ளது. மேலும் 4,000க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில், நுவாகோட் மாவட்டத்தில் ஒரே வீட்டிற்குள் இருந்து 23 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.
நுவாகோட்டின் பிதுர் நகராட்சிக்குட்பட்ட பெட்ராவதி கிராமத்தில், போதேகோஷி ஆற்றின் வெள்ளப் பெருக்கால் மூன்று மாடி வீடு ஒன்று முழுமையாகச் சேற்றில் புதைந்தது. வீட்டின் மேல்தளத்திற்கு அருகில் இருந்த ஒரே அறைக்குள் இருந்து 21 சடலங்களும், வெளியே 2 சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. வெள்ள நீர் உயர்ந்த போது தப்பிக்க மேல் தளத்திற்குச் சென்ற மக்கள், கட்டிடத்தோடு சேர்த்துப் புதைந்து உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
கண்டெடுக்கப்பட்ட சடலங்களில் தாய் தனது குழந்தையை இறுக்கமாகக் கட்டியணைத்தபடி இருந்த காட்சி மீட்புக் குழுவினரைச் சோகத்தில் ஆழ்த்தியது. சடலங்களின் அருகில் பைகள் கண்டெடுக்கப்பட்டதால், அவர்கள் கோஸை்குண்டா (Gosaikunda) ஆன்மீகப் பயணத்திற்குச் சென்ற பக்தர்களாக இருக்கலாம் என காவல்துறை கண்காணிப்பாளர் பிபின் ரெக்மி தெரிவித்துள்ளார்.
ரசுவா மாவட்டத்தின் உத்தரகாயா கிராமத்தில் இயங்கி வந்த பள்ளியைச் சேர்ந்த சுமார் 350 மாணவர்கள் காணாமல் போயுள்ளனர். திரிசூலி 3A நீர்மின் திட்டப் பகுதியில் பணியாற்றிய 40-க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் திரிசூலி 3B திட்டத்தில் பணியாற்றிய 118 ஊழியர்களைத் தொடர்புகொள்ள முடியாமல் மீட்புக் குழுவினர் திணறி வருகின்றனர்.
இந்திய மீட்புக் குழுவின் தீவிர நடவடிக்கை: நேபாள ராணுவத்துடன் இணைந்து இந்திய மீட்புக் படை வீரா்களும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் தேடுதல் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர். ரசுவா மாவட்டத்தின் சிலிமி மற்றும் லாங்டாங் சுரங்கப் பாதைகளில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணியில் இந்தியக் குழுவினர் முதற்கட்ட முன்னேற்றத்தை அடைந்துள்ளனர்.



