சென்னையில் முதல் கட்டமாக 50 இடங்களில் குடிநீர் ஏடிஎம்களை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் தொடங்கி வைக்கிறார். இதன் சிறப்பம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், சென்னை மாநகராட்சி புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக 50 குடிநீர் ஏடிஎம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மெரினா கடற்கரையில் தொடங்கி வைக்க உள்ளார்.
மக்கள் தங்கள் தேவைக்கேற்ப 150 மில்லிலிட்டர் அல்லது 1 லிட்டர் அளவில் குடிநீர் பெறலாம். அதேபோல் பொதுமக்கள் தங்களின் வாட்டர் பாட்டில்களிலும் குடிநீர் பெற்று கொள்ள முடியும். இதனால், புதிய பாட்டில் வாங்கும் செலவு மற்றும் பிளாஸ்டிக் மாசுபாடு இரண்டுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்த ஏடிஎம்களில் முன் வடிகட்டல், ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் மற்றும் UV (புற ஊதாக் கதிர்கள்) போன்ற அதிநவீன நீர் சுத்திகரிப்பு முறைகள் உள்ளன. தேசிய தரத்திற்கு இணையாக தூய்மையான குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
ஸ்மார்ட் கார்டு, நாணய வசதி, எஸ்எம்எஸ் அப்டேட்:
* இந்த ஏடிஎம்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
* கட்டணம் செலுத்த ஸ்மார்ட் கார்டு மற்றும் நாணயங்கள் பயன்படுத்தலாம்.
* இந்த குடிநீர் ஏடிஎம்களில் கடைசி 50 முறை ரீசார்ஜ் செய்யப்பட்ட பரிவர்த்தைகளின் விவரங்களையும் பயனர்கள் அறிய முடியும்.
* குடிநீர் இருப்பு குறைவாக இருந்தால், பாஸ்வேர்ட் மூலம் ரீசார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.
* ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
எங்கே கிடைக்கும்? மெரினா கடற்கரை, பேருந்து நிலையங்கள், பூங்காக்கள், பள்ளிகள், கல்லூரிகள், சந்தைகள் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த ஏடிஎம்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்த திட்டம் முதற்கட்டமாக 50 இடங்களில் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் பயன்பாட்டினைப் பொருத்து, அடுத்த கட்டமாக நகரமெங்கும் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: காவல்துறையில் 25 வருடம் பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு…! தமிழக அரசு அரசாணை..!