பெண்கள் இனி கூடுதல் கட்டணம் செலுத்தாமல் செல்லக்கூடிய அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதுவரை குறிப்பிட்ட சேவைகளில் மட்டும் வழங்கப்பட்டு வந்த இலவச பயண வசதி, மாநகரம் முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் வரை விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ளார்.
புதிய விரிவாக்கம் வரும் அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்படி, மாநகர மற்றும் நகரப் பகுதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ். மற்றும் டீலக்ஸ் வகை அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம்.
அதேபோல், மாவட்டங்களுக்கு இடையே இயக்கப்படும் சாதாரணக் கட்டண பேருந்துகள், புறநகர் பேருந்துகள் மற்றும் மலைப்பகுதி பேருந்துகளிலும் பெண்களுக்கு கட்டணம் கிடையாது. இந்தச் சலுகை திருநர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியைப் பெறுவதற்கு குடும்ப வருமானம் தொடர்பாக எந்த வரம்பும் கிடையாது என்பது முக்கிய அம்சமாக உள்ளது. மேலும், இலவசமாக பயணம் செய்யும் எண்ணிக்கைக்கும் எந்த உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. இதனால், தகுதியுடைய பெண்கள் தங்களது தேவைக்கேற்ப இந்தப் பயண வசதியை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதற்காக அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி செலவு ஏற்படும் என சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் அன்றாட போக்குவரத்து செலவைக் குறைக்கும் வகையில் இந்த விரிவாக்கம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, குடும்பங்களுக்கான எரிவாயு சிலிண்டர் தொடர்பாகவும் சட்டப்பேரவையில் முக்கிய அறிவிப்பு வெளியானது. ‘அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்’ திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டத்தின் கீழ் சிலிண்டருக்கான தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். சுமார் 1.30 கோடி குடும்பங்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்காக குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இலவச சிலிண்டர் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.4,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் காலத்தில் பெண்களை மையமாக வைத்து அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில், இலவச பேருந்து பயணம் மற்றும் இலவச சிலிண்டர் ஆகியவை முக்கியமானதாக இருந்த நிலையில், தற்போது அவற்றை செயல்படுத்துவதற்கான கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: திமுக–பாஜக கூட்டணியா? தவெக–விசிக இணைப்பா? தமிழக அரசியலில் அடுத்தடுத்து திருப்பங்கள்!



