செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மேலும் நான்கு பேரை கட்சியின் பொறுப்பில் இருந்து விடுவித்து எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையனுக்கும், கடந்த சில மாதங்களாக கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. இதனிடையே கடந்த வாரம் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் சேர்க்கும் பணியை 10 நாட்களுக்குள் தொடங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்திருந்தார். அவருடைய இந்த அதிரடி அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தான் அதிமுக கட்சி பொறுப்பில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ம் தேதி அறிவித்தார். மேலும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது மேலும் நான்கு பேரை கட்சியின் பொறுப்பில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், அம்மாபேட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் S. செல்வன் அவர்களும், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் அருள் ராமச்சந்திரன் அவர்களும், மாவட்ட தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் A.V.M. செந்தில் (எ) கோடீஸ்வரன் அவர்களும், சத்தியமங்கலம் நகர புரட்சித் தலைவி பேரவை இணைச் செயலாளர் பொறுப்பிலும், 24-ஆவது வார்டு கழகச் செயலாளர் பொறுப்பிலும் இருக்கும் திரு. S.D. காமேஷ் அவர்களும் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.