தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்ய 5 தனிப்படை விரைவு.
கரூரில் தவெக தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக இருந்து வரும் இருவரும் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி ஜோதிராமன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. கரூர் சம்பவம் தொடர்பாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவம் நீதிமன்றத்தை தொந்தரவு செய்கிறது. சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளி மதியழகன் மற்றும் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் தாக்கல் செய்த ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
கரூர் சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்தை கைது செய்ய 5 தனிப்படைகள் தீவிரம் காட்டி வருகிறது. முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை, சேலம், ஈரோடு என 3 மாவட்டங்களில் ஆனந்தை கைது செய்ய தனிபடை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். செல்போன் பயன்பாடு, உறவினர்கள் மற்றும் நெருக்கமான மாவட்ட செயலாளர்கள் தொடர்புடைய பகுதிகளில் தனிப்படை தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் ஆனந்த் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் விரைந்துள்ளனர்.