நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 5ஜி மொபைல் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் பெம்மசானி சந்திரசேகர் ; நாடு முழுவதும் ஜூன் 30-ம் தேதி வரையிலான கால கட்டத்தில் 4.86 லட்சம் 5ஜி அலைக்கற்றை பரிமாற்ற நிலையங்களை தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதிலும் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் 5ஜி சேவைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் 100 பயன்பாட்டு அடிப்படையிலான ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த ஆய்வகப் பணிகளில் திறன் மேம்பாட்டை மேம்படுத்தும் வகையில் சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் இணையதள சேவை
நாட்டில் இணையதள சேவை பயனாளர்களின் எண்ணிக்கை 969.10 மில்லியனாக அதிகரித்துள்ளது. கிராமப்புறங்களில் இணையதள சேவைகளை மேம்படுத்தும் வகையில், மத்திய அரசு அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இணையதள சேவைகள் கிடைக்காத கிராமப்புறங்களில் 4ஜி மொபைல் சேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதுமை கண்டுபிடிப்புகள், மேம்பாட்டு நடவடிக்கைகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் 5 ஆண்டுகளில் 1,600 தொழில்நுட்ப புத்தாக்க நிறுவனங்களை உருவாக்க ஏதுவாக 490 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு நகரங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையிலும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த சேவைகளை வழங்குவதற்கு ஏதுவாக 104 நகரங்களில் 246 புதிய அலகுகளை உருவாக்குவதற்கான திட்டமும் இதில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.