செப்டம்பர் மாதம் நாளை தொடங்க உள்ள நிலையில், பொதுமக்களின் தினசரி வாழ்க்கையையும், நிதி தொடர்பான முடிவுகளையும் பாதிக்கும் வகையில் 6 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவிருக்கின்றன. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
வருமானவரி தாக்கல்: வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டிருந்த கூடுதல் காலக்கெடு விரைவில் முடிவடைகிறது. செப்டம்பர் 15க்குள் கணக்குத் தணிக்கை தேவையில்லாதவர்கள் தாக்கல் செய்ய வேண்டும். கணக்குத் தணிக்கை அவசியமானவர்கள் அக்டோபர் 31க்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
NPS-இலிருந்து UPS-க்கு மாறும் வாய்ப்பு: மத்திய அரசு ஊழியர்களுக்கு NPS-இல் இருந்து UPS-க்கு மாறும் அவகாசம் செப்டம்பர் 30 அன்று நிறைவடைகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்தாவிட்டால், பழைய திட்டத்திலேயே நீடிக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ரிஜிஸ்டர்டு போஸ்ட் சேவை முடிவு: இந்திய அஞ்சல் துறையில் செப்டம்பர் 1, 2025 முதல், உள்நாட்டு ரிஜிஸ்டர்டு போஸ்ட் சேவை நிறுத்தப்படுகிறது. இதற்குப் பதிலாக, இனி மக்கள் இந்திய அஞ்சல் மூலமாக பதிவு செய்யப்பட்ட அஞ்சல் அனுப்பினால், அது ஸ்பீட் போஸ்ட் சேவை வழியாகவே அனுப்பப்படும் என்று அஞ்சல் துறை (DoP) தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் மூலம் பொதுமக்களுக்கு விரைவான சேவை கிடைக்கும் என்றும், அஞ்சல் விநியோகத்தில் தாமதம் குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு விதிகளில் மாற்றம்: இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ, தனது கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கான விதிகளில் முக்கிய மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் செப்டம்பர் 1, 2025 முதல் அமலுக்கு வருகின்றன.
புதிய விதிமுறைகளின் படி, தேர்ந்தெடுக்கப்பட்ட சில கிரெடிட் கார்டுகளில் ரிவார்ட் பாயிண்ட் திட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இனி வாடிக்கையாளர்கள், டிஜிட்டல் கேமிங் தொடர்பான செலவுகள், அரசாங்க வலைத்தளங்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகள் எனும் இரு பிரிவுகளுக்கான செலவுகளில் ரிவார்ட் பாயிண்ட் பெற முடியாது. இதனால், எஸ்பிஐ கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தங்கள் செலவுத் திட்டங்களை மீளாய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
சிறப்பு FD திட்டங்கள்: இந்திய வங்கி துறையில் தற்போது பல்வேறு சிறப்பு Fixed Deposit (FD) திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியன் வங்கி மற்றும் ஐடிபிஐ வங்கி செயல்படுத்தி வரும் ஸ்பெஷல் டெனர் எப்டி திட்டங்களுக்கு முதலீடு செய்யும் காலக்கெடு விரைவில் முடிவடைகிறது.
* இந்தியன் வங்கி – 444 நாள், 555 நாள் FD திட்டங்களில் முதலீடு செய்யும் கடைசி நாள் செப்டம்பர் 30, 2025.
* ஐடிபிஐ வங்கி – 444 நாள், 555 நாள், 700 நாள் FD திட்டங்களுக்கும் முதலீடு செய்யும் கடைசி நாள் செப்டம்பர் 30, 2025.
இந்த திட்டங்களில் பொதுவான எப்டி வட்டி விகிதத்தை விட அதிக வட்டி கிடைக்கும் என்பதால், வாடிக்கையாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆதார் அட்டை இலவசமாக புதுப்பிக்கும் அவகாசம்: இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் ஆவணங்களை புதுப்பிக்க வழங்கியிருந்த இலவச வசதி விரைவில் முடிவடைய உள்ளது. ஆதார் விவரங்களை செப்டம்பர் 14, 2024 வரை எந்தச் செலவும் இன்றி புதுப்பிக்கலாம்.
இதற்காக, அடையாளம் மற்றும் முகவரி தொடர்பான ஆவணங்களை UIDAI இணையதளத்தில் (myAadhaar portal) பதிவேற்ற வேண்டும். மக்கள் தொகை விவரங்கள் துல்லியமாக இருக்கும் வகையில் அவ்வப்போது ஆதார் விவரங்களை சரிபார்த்து புதுப்பித்து வைத்திருக்க வேண்டும் என்று UIDAI வலியுறுத்தியுள்ளது. அதனால், ஆதாரில் உள்ள தகவல்களில் திருத்தம் தேவைப்படுவோர், இந்த இலவச அவகாசத்தை தவறவிடாமல் உடனே புதுப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
Read more: உஷார்!. கழுத்தில் கருமை ஏற்படுகிறதா?. இந்த நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்!.