2026 சட்டசபை தேர்தலுக்கான கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் மீண்டும் கூட்டணியாக இணைந்து சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது.
இதனிடையே ஆட்சி அதிகாரத்தில் பங்கு, அதிக தொகுதிகளை கேட்பது என கே எஸ் அழகிரி கூறியதால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இது மறைமுகமாக தமிழக வெற்றி கழகம் கட்சியுடன் காங்கிரஸ் செல்வதற்கான சிக்னலாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூடுதல் தொகுதிகள் வேண்டும் என திமுக தலைமையிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மறுபுறம் ஒரு முக்கிய நிர்வாகி மூலம் விஜயிடம் தனிப்பட்ட்ட முறையில் பேசியதாக கூறப்படுகிறது. இந்த முயற்சி குறித்து ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், சில மாநிலத் தலைவர்கள் விஜயுடன் கூட்டணி அமைக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய் தலைமையிலான தவெக கட்சி, 2026 தேர்தலில் குறைந்தபட்சம் காங்கிரசுக்கு 60 தொகுதிகளை தருவதாகவும், துணை முதலமைச்சர் பதவி, ஆட்சியில் பங்கு தர விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இருந்தால் குறைந்த இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
ஆனால் தவெக உடன் இணைந்தால் ஆட்சியில் பங்கு என புதிய கதவுகள் திறக்கும் என காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர். பீகார் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் கூட்டணி விவகாரம் குறித்து முடிவு எடுக்கலாம் என ராகுல் கூறியுள்ளதாக கூறப்படுகிறது.



