மூளையை திண்ணும் அமீபா பாதிப்பால் கேரளாவில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடும் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் இறப்புக்கான காரணம் குறித்து நுண் உயிரியியல் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது சிறுமியின் மூளையில் அரியவகை அமீபா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
அறிகுறிகள் & சிகிச்சை
மூளை திசுக்களை திண்ணும் இந்த அரிய வகை அமீபா மாசடைந்த ஏரி, குளம், ஆறுகளில் இந்த வகை அமீபா உயிர் வாழும். இந்த நீர்நிலைகளில் குளித்தால், மூளைவாதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகள் தொடக்கத்தில் ஏற்படும். பின்னர், கழுத்து விறைப்பு, வலிப்பு, மாயத்தோற்றம் மற்றும் கோமா போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.
சிகிச்சை தாமதமாகத் தொடங்கினால், இறப்புக்கான வாய்ப்புகள் அதிகம் என்று தேசிய சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. பூஞ்சை காளான் மருந்துகளும், பிற சிகிச்சைகளும் இந்த நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த உதவும். சுத்திகரிக்கப்படாத நீரில் நீச்சல் அடிப்பதையும், மூக்கினுள் தண்ணீர் செல்லாமல் பார்த்துக் கொள்வதும் மிகவும் அவசியம். மூக்கில் நீர் செல்லும் வாய்ப்பு உள்ள இடங்களில், மூக்கை மூடுவது நல்லது.