தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்; மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களில் நடைபெற்ற பணிகளை ஆண்டாய்வு செய்ய 20 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆய்வு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளவர்கள் ஜூலை மாதம் 31-ம் தேதிக்குள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு சென்று உரிய பதிவேடுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், “முதன்மை கல்வி அலுவலகங்களில் உள்ள அனைத்து கோப்புகள் பதிவேடுகள் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் முழுமையாக தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். முந்தைய ஆண்டாய்வில் சுட்டிக் காட்டப்பட்ட குறைகள் நிவர்த்தி செய்யப்பட்ட அறிக்கையை தயார் நிலையில் வைத்திருப்பது அவசியம். பள்ளிக்கல்வித்துறை இயக்குநரால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின் அடிப்படையில் மாவட்டம் கல்வி அலுவலகம் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆண்டாய்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அனைத்து வகை சுயநிதி பள்ளிகள் பிறவாரிய பள்ளிகள் தொடங்குவது மற்றும் தொடர் அங்கீகாரம் சார்ந்த பதிவேடு அரசின் நலத்திட்ட உதவிகள் சார்ந்த பதிவேடுகள், ஊரகத் திறனாய்வு, தேசிய திறனாய்வு தேர்வுகள், படிப்பு உதவி தொகை வழங்கிய விவரங்கள் , பெற்றோர் ஆசிரியர் கழக கணக்குகள் போன்றவற்றையும் தயார் நிலையில் வைக்க வேண்டும்.மேலும் தகவல் உரிமை சட்டம் 2005, முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மற்றும் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனுக்கள் குறித்த பதிவேடுகள் பராமரிக்கப்பட்டு மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பள்ளிக்கல்வித்துறையில் பராமரிக்கப்படும் அனைத்து பதிவேடுகள் குறித்த விவரங்களையும் ஆய்வின் போது சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.