தலைமைக் கழகம் அழைப்பு என்ற பெயரில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையது அல்ல என்றும் எத்தனை ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடக்க வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”பொதுக்குழுவைக் கூட்டுவதற்கு அவர்களுக்கு அதிகாரமில்லை. கடந்த பொதுக்குழுவில், நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் கருத்துகளை கவனத்தில் கொள்ளாமல், 23 தீர்மானங்களுக்கு மேல் எந்த தீர்மானத்தையும் கொண்டுவரக்கூடாது என்ற நீதிபதிகளின் தீர்ப்பை புறந்தள்ளிவிட்டு அவைத்தலைவர் தேர்வு, பொதுக்குழுக் கூட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் என்ற தீர்மானங்கள் செல்லாது. பொதுக்குழுக் கூட்டம் என்ற பெயரில் அவர்கள் பொதுக்கூட்டம் போல் நடத்துவார்கள், நடத்தலாம். ஆனால், அது சட்டப்படி செல்லுபடியாகாது என்பதுதான் எங்களுடைய கருத்து.
தலைமைக் கழகம் அழைப்பு என்ற பெயரில், அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைப்பிதழ் அனுப்புவது ஏற்புடையது அல்ல. அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடக்க வாய்ப்பே இல்லை. எடப்பாடி பழனிசாமி தரப்பு சர்வாதிகார மனநிலையோடு செயல்படுகின்றனர். ஒற்றை மற்றும் இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் உள்ளதால், அடுத்த நிலையில் உள்ள பொருளாளருக்குதான் கட்சியை வழிநடத்தும் அதிகாரம் உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், கட்சியின் பொருளாளருக்குதான் சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது. எனவே, பொருளாளரின் ஒப்புதல் இல்லாமல், தலைமைக்கழக நிர்வாகிகள் பொதுக்குழுக் கூட்டத்தை கூட்ட முடியாது” என்றார்.